
கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகரின் ஒரு பகுதியில் உள்ளது பெரியார்நகர். இந்த நகரில் வசித்துவந்த ராமசாமி (70) என்பவரின் மகன் சுரேஷ் (41). இவர், வாடகை கார் ஓட்டி தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவந்துள்ளார். இவருக்கு கரோனா தொற்று காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சுரேஷ், கடந்த மாதம் 30ஆம் தேதி காலை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அன்று மாலையே சுரேஷ் உயிரிழந்தார். சுரேஷ் இறந்த தகவல் அறிந்த அவரது தந்தை ராமசாமி மற்றும் உறவினர்கள் 31ஆம் தேதி சுரேஷ் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக சிதம்பரத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு சென்றதும் மகன் இறந்த துக்கத்தில் இருந்த ராமசாமி, மருத்துவமனையில் இறந்த மகனின் உடலை நேரடியாக பார்த்ததும் அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதனைக் கண்டு பதறிப்போன அவரது உறவினர்கள், அங்கிருந்த டாக்டர்களை அழைத்து வந்து காட்டியுள்ளனர். டாக்டர்கள், ராமசாமியை பரிசோதனை செய்தபோது அவர் இறந்தது தெரியவந்துள்ளது. மகன் இறந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் தந்தையும் மருத்துவமனை வளாகத்திலேயே இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.