/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-in_203.jpg)
கிருஷ்ணகிரி அருகே, குடும்பத் தகராறில் கோபித்துக் கொண்டு மனைவி பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்ட விரக்தியில், மகளுக்கு விஷம் கலந்த மதுபானத்தை கொடுத்து கொலை செய்ய முயன்ற தந்தை, தானும் விஷ மதுவை குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள உலகம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாக்கப்பா (38). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 11 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருக்கு 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மே 27ம் தேதி அன்றும் தம்பதியரிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ராஜேஸ்வரி, கணவருடன் கோபித்துக் கொண்டு, மேடுப்பள்ளி கிராமத்தில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். கணவருடன் குழந்தைகள் மட்டும் இருந்தனர்.
மனைவி, பெற்றோர் வீட்டுக்குச் சென்றதால் சாக்கப்பா கடும் விரக்தி அடைந்தார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார். தன்னுடைய மறைவுக்குப் பிறகு குழந்தைகளை மனைவி கவனித்துக் கொள்ளாமல் விட்டுவிடுவாரோ என எண்ணிய அவர், குழந்தைகளையும் கொல்ல முடிவெடுத்துள்ளார். இதையடுத்து கடந்த 27ம் தேதி மதுபானம் வாங்கி வந்த சாக்கப்பா, அதில் விஷத்தை கலந்து முதலில் மகளுக்கு குடிக்க கொடுத்துள்ளார். அதைக் குடித்த சிறுமி சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். மகன் வெளியே சென்று விட்டதால், அவனுக்கு விஷம் கலந்த மதுவை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து அவரும் விஷம் கலந்த மதுவை குடித்துள்ளார்.
பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் சாக்கப்பாவைத் தேடி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் சாக்கப்பாவும், சிறுமியும் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள், இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி சாக்கப்பா மறுநாள் உயிரிழந்தார். சிறுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரும் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
சம்பவத்தன்று சாக்கப்பாவின் மகன், தனது சித்தப்பாவுடன் வெளியே சென்று விட்டதால் சிறுவன் உயிர் தப்பினான். இல்லாவிட்டால் அவனுக்கும் சாக்கப்பா விஷம் கலந்த மதுவை கொடுத்து கொன்றிருப்பார் என்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து சூளகிரி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)