Father stabs son to passed away with beer bottle

சென்னை மாங்காடு அம்பாள் நகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். தட்சிணாமூர்த்திக்கு குமரன்(38) என்ற மகன் உள்ளார். இவருக்குச் சமீபத்தில் திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றதால் குமரன் மற்றும் அவரது தந்தை மட்டும் தனியாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதனிடையே இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் இருவரும் மது அருந்திவிட்டு போதையில் தகராறு செய்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

அந்த வகையில், வழக்கம்போல் நேற்று காலை மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு ஒரு கட்டத்தில் முற்ற ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி வீட்டில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து மகன் குமரன் தலையில் அடித்துள்ளார். பின்பு உடைந்து கிடந்த பீர் பாட்டிலை எடுத்து மகன் என்று பாராமல் குமரனை குத்தியுள்ளார். தொடர்ந்து இரும்பு கம்பியாலும் தாக்கியிருக்கிறார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த குமரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisment

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குமரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தட்சிணாமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை பீர்பாட்டிலால் மகனை குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.