
விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம், திண்டிவனம், மரக்காணம், வானூர், திருவெண்ணைநல்லூர் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இத்தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்களைக் கண்டுபிடிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் கூடுதல் எஸ்.பி. அக்ஷய்குமார் குப்தா தலைமையில் தனிப்படை போலீசார் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், மயிலம் அருகில் உள்ள தைல மரம் காட்டில் 2 மர்ம நபர்கள் பதுங்கியிருப்பதாக மயிலம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு ரகசியமாகச் சென்ற போலீஸார், அங்கு மறைந்திருந்த 2 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் சேலம் மாவட்டம், ஓமலூர் அருகிலுள்ள மேல் காமண்டபட்டி என்று கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி(52) மற்றும் அவரது மகன் செல்வக்குமார்(23) என்பது தெரியவந்தது. மேலும், தந்தை மகன் ஆகிய இவர்கள் இருவரும் திண்டிவனம் மயிலம் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இவர்களிடமிருந்து 6 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தந்தை மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த மயிலம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
அதேபோல், திண்டிவனம் செஞ்சி மார்க்கெட் கமிட்டி அருகே காட்டு சிவிரி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி உள்ளார். பின்னர் தனது இரு சக்கர வாகனத்தை எடுப்பதற்கு வரும்போது அவரது இரு சக்கர வாகனத்தை வேறு ஒரு நபர் திருடிக் கொண்டு சென்றதைப் பார்த்தவர் கத்தி கூச்சல் போட்டுள்ளார். அருகிலிருந்தவர்கள் அந்த வாகன திருடனைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் அவனை ரோசனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை செய்ததில் திண்டிவனம் அருகிலுள்ள தீவனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 27 வயது பழனி என்பது தெரியவந்தது. இவர் மீது வாகன திருட்டு வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.