Skip to main content

பெண் கொடுக்க மறுத்ததால் பெண்ணின் தந்தையை கொலை செய்த கும்பல்!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021
father refused a person to marry his daughter, gang attacked

 

அரியலூர் மாவட்டம் கீழபழுர் அருகே உள்ளது வைப்பூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுலோச்சனா, இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மகளை அதே ஊரைச் சேர்ந்த நாகராஜ் குள்ளாயி தம்பதியின் மகன் அஜீத்குமார்(20) என்பவர் திருமணம் செய்து கொள்வதற்கு விரும்பியுள்ளார். இந்த தகவல் கண்ணனுக்கு தெரியவந்தது. தன் மகளை அஜித்குமாருக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கு கண்ணனுக்கு விருப்பம் இல்லை. அதனால் சில மாதங்களுக்கு முன்பு வெளியூரில் மாப்பிள்ளை பார்த்து தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் கண்ணன்.

 

இதனால் அஜித் குமார் மற்றும் அவரது சகோதரர்கள் விஜயகுமார், முத்துக்குமார், அருண்குமார் ஆகியோர் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை அவ்வப்போது மிரட்டி வந்துள்ளனர். மேலும், அவ்வப்போது இரவு நேரங்களில் கண்ணன் வீட்டுக்கு நேரடியாக வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று பயந்த கண்ணன் அவரது மனைவி சுலோச்சனா ஆகிய இருவரும் தூத்தூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளார். மேலும் "அஜீத்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அவர் வீட்டுக்கே வந்து தவறாகப் பேசுகிறார்கள்.

 

அவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் எனவே அவர்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவே எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்" எனப் புகார் மனு அளித்துள்ளனர். சரி சரி பார்த்துகலாம் போங்க என்று சப்-இன்ஸ்பெக்டர் அலட்சியமாக கண்ணனையும் அவர் மனைவியையும்  அனுப்பிவிட்டார். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு அஜித் குமார் மற்றும் அவரது சகோதரர் கண்ணனிடம் மீண்டும் தகராறு செய்துள்ளனர்.  உடனே தொலைபேசி மூலம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம், "தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் அஜீத்குமார் சகோதரர்களால் ஆபத்து உள்ளது நேரடியாகவே வீட்டுக்கு வந்து மிரட்டுகிறார் எனவே பாதுகாப்பு கொடுங்கள்" என்று கண்ணன் மீண்டும் கேட்டுள்ளார்.

 

அதையும் ராஜ்குமார் அலட்சியம் செய்துள்ளார். இந்த நிலையில் 11ஆம் தேதி காலை தங்கள் ஊருக்கு அருகில் மீன் விற்பனை செய்யும் இடத்திற்கு மீன் வாங்குவதற்காக தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் கண்ணன் சென்றுள்ளார். அப்போது வழியில் மறைந்திருந்த அஜீத்குமார் கண்ணனை வழி மறித்து கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதைக்கண்டு அக்கம்பக்கத்தினர் மிரண்டு ஓடினார்கள். ரத்த வெள்ளத்தில் விழுந்த கண்ணனை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக இறந்துள்ளார். தூத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரின் அலட்சியப் போக்கினால் ஒரு உயிர் அநியாயமாகப் பறிபோனது கண்டு கோபமடைந்த கண்ணனின் உறவினர்கள் கண்ணனின் சடலத்தை சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர்.

 

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டதோடு, "காவலர் அலட்சியமாக இருந்ததன் காரணமாக இப்போது கண்ணனின் உயிர் பறிபோயுள்ளது. அப்படிப்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்தனர். விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாக்குறுதி கொடுத்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. கண்ணனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்பு அடக்கம் செய்யப்பட்டது. பெண் தர மறுத்ததற்காகக் கொலை செய்த அஜித் குமார் மற்றும் அவரது சகோதரர் அருண்குமார், முத்துக்குமார், விஜயகுமார் உட்பட 6 பேர்களைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளது தூத்தூர் காவல்துறை. 
 

 

சார்ந்த செய்திகள்