
மதுரையைச் சேர்ந்த திருமலை செல்வனுக்கும், ஈரோடு, மாணிக்கம்பாளையம், முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த சுகன்யா (23) என்பவருக்கும் திருமணம் ஆகி 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு மகனும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுகன்யா மதுரையில் கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் திருமலை செல்வன் அடிக்கடி மது அருந்திவிட்டு சந்தேகப்பட்டு சரண்யாவை அடித்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் சுகன்யா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஒரு மாதத்திற்கு முன்பாக ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
ஈரோட்டில் தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் தங்கி இருந்த சுகன்யா சாயப்பட்டறைக்கு வேலைக்குச் சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திருமலை செல்வன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக ஈரோடுக்கு வந்தார். சுகன்யாவை தன்னுடன் குடும்பம் நடத்து வருமாறு அழைத்துள்ளார். அப்போது இது தொடர்பாக கணவன் -மனைவி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த திருமலை செல்வன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மனைவி மற்றும் இரு குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சுகன்யா மற்றும் 7 வயது மகள் சுதாரித்து விலகிய நிலையில் 4 வயது மகன் மீது தீப்பிடித்து வேதனையால் அலறினான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகன்யா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு 70 சதவீத தீ காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து சுகன்யா ஈரோடு வீரப்ப சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலைச்செல்வனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.