/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-in_77.jpg)
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள கோவில் புறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன்(40). மாற்றுத்திறனாளியான இவரின் மனைவி ரேவதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார்.
வெங்கடேசனுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் அவலூர்பேட்டை அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் தனது இளைய மகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வெங்கடேசன், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குத்தனது ஊர்க்காரர்களுடன் சென்றுள்ளார். அது முடிந்து வீடு திரும்புபோது ஊர்க்காரர்களுடன் சேர்ந்து வெங்கடேசனும் மது அருந்தியுள்ளார். அளவுக்கு அதிகமான போதையில் வெங்கடேசன் மாலை வீட்டுக்கு வந்துள்ளார்.
அன்று இரவு 8 மணி அளவில் வெங்கடேசன் மர்மமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது மகள் பிளஸ் 2 மாணவி கத்தி கதறி அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். இந்த தகவலறிந்து அவலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு அக்கம்பக்கத்தினரிடம் அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்டு இறந்து போன வெங்கடேசனின் மகள் பிளஸ் 2 படிக்கும் மாணவியின் மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவர், தனது தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததை நான் தான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் மாணவி அளித்த வாக்குமூலத்தில், “கடந்த இரண்டு வாரங்களாக எனது தந்தை இரவு நேரங்களில் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். நேற்றுமுன்தினம் மாலை பள்ளிக்குச் சென்று வீடு திரும்பியதும் என்னிடம் தகாத முறையில் நடக்க முற்பட்டார். நான் கண்டித்தும் அவர் கேட்கவில்லை. அதிக அளவில் மது குடித்த போதையில் இருந்ததால் என்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டார். வேறு வழியில்லாமல் நான் அவரிடமிருந்து என்னை காப்பாற்றிக் கொள்வதற்காக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரது நெஞ்சில் குத்தினேன். அதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவம் அன்று மாலை 5 மணி அளவில் நடந்தது. அப்போது இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டு; பிறகு இரவு 8 மணியளவில் மீண்டும் வீட்டிற்குள் வந்த நான், தந்தையை யாரோ குத்திக் கொலை செய்துவிட்டதாக கூறி அழுது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தேன்” இவ்வாறு போலீசாரிடம் பிளஸ்-2 மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். தந்தையை கொலை செய்த பள்ளி மாணவியை போலீசார் கைது செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)