/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siren-ni_3.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் கட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் ( 34). இவர் அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி பிரியா (30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு ரிஷி (7) என்ற மகனும், நிதர்ஷனா (4) என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில், பால்ராஜுக்கும், பிரியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன், மனைவி என இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வந்தனர். அதன்படி, கடந்த 3 ஆண்டுகளாக, பிரியா விராலிமலை அருகே உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். இதனையடுத்து, பால்ராஜ் தனது இரண்டு குழந்தைகளுடன் கட்டக்குடியில் உள்ள தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி செல்போனில் தனது மனைவியை தொடர்பு கொண்ட பால்ராஜ், குழந்தைகள் அவரை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார். அதனால், விராலிமலை அருகே உள்ள ஒரு கோவிலுக்கு வரும்படி அழைத்துள்ளார். இதை நம்பிய பிரியா, விராலிமலை கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு வந்த பிரியாவுக்கும், பால்ராஜுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பால்ராஜ், தான் மறைத்து வைத்திருந்த சிறிய வகையான கத்தியை வைத்து பிரியாவை குத்தியுள்ளார். இதில் பிரியா காயமடைந்தார். இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்தவர்கள், பால்ராஜை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் விராலிமலை காவல்துறையினர், பால்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்ராஜ் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். இதனையடுத்து, நேற்று முன் தினம் (15-10-23) அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகள் நிதர்ஷனாவை தூக்கிக் கொண்டு வெளியே சென்ற பால்ராஜ் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதில் சந்தேகமடைந்த பால்ராஜின் உறவினர்கள், அவர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தும் அவர்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று (16-10-23) காலை கட்டக்குடியிலுள்ள தர்மகுளம் வழியாக சென்றவர்கள் குளத்தில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக இலுப்பூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு வந்த காவல்துறையினருக்கு, சடலமாக கிடந்த இரண்டு பேரும் பால்ராஜும், அவரது மகள் நிதர்ஷனா என்பது தெரியவந்தது. இதனையடுத்து, குளத்தில் இறங்கி அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பால்ராஜ் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மகள் நிதர்ஷனாவுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)