புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மேலப்புள்ளாண்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர் கடந்த 26 ந் தேதி சாலையோரம் மோட்டார் சைக்கிளுடன் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். முதலில் விபத்தில் உயிரிழந்ததாக போலிசார் வழக்கு பதிவு செய்தனர்.  இதனைத் தொடர்ந்து நடந்த விசாரனையில் பாஸ்கரின் குடும்பத்தினரே கொலை செய்து திசைதிருப்பும் எண்ணத்தில் சாலையோரம் கொண்டு வந்து போட்டது தெரியவந்தது.

Advertisment

தொடர் விசாரனையில், பாஸ்கரின் காதல் மனைவி பானுமதி வேறு சமூகம் என்பதால் குடும்பத்தினர் ஏற்காததால் பானுமதி பிரிந்து சென்ற நிலையில் அவர்களது குழந்தை வசந்தன் பாஸ்கருடன் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் அண்ணன் மனைவியுடன் தகாத உறவு ஏற்பட்டதை அறிந்த அண்ணன் முருகேசன் மாலத்தீவில் இருந்தே திட்டம் தீட்டி மனைவியை வெளியூர் செல்ல சொல்லிவிட்டு ஊருக்கு வந்து தம்பி பாஸ்கர் தலையில் கல்லை போட்டு கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார்.  இதனையடுத்து அவரது உடலை சாலையோரம் போட்டுவிட்டு ஊரைவிட்டு வெளியேறி மறுநாள் தம்பி இறப்பிற்காக வருவது போல வந்துள்ளார். இதனையடுத்து முருகேசன் அவரது மனைவி விமலாராணி, அப்பா வீரப்பன், அம்மா வசந்தா ஆகியோரை கைது செய்தனர்.

தாய் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் தந்தையின் பாதுகாப்பில் இருந்த வசந்தன் வடகாடு புள்ளாச்சிகுடியிருப்பு  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது தந்தையையும் கொன்றுவிட்டதால் ஆதரவின்றி காவல் நிலையத்தில் நின்ற சிறுவனை யாரும் வளர்க்க முன்வாரததால் போலீசார் புதுக்கோட்டையில் ஒரு காப்பகத்தில் சேர்த்திருந்தனர். இந்த தகவல்களை சமூகவலைதளங்கள் மூலம் பார்த்த பாஸ்கரின் மனைவி பானுமதி வடகாடு காவல்நிலையம் சென்று பாஸ்கருடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அவரது குடும்பத்தினர் என்னை ஏற்காததால் பிரிந்து சென்று மணப்பாறை அருகே வசிக்கிறேன். இப்போது என் கணவரையும் கொன்றுவிட்டனர். அதனால் என் குழந்தை ஆதரவின்றி தவிப்பது பற்றி சமூகவலைதளங்களில் தகவல் அறிந்தேன். காப்பகத்தில் இருக்கும் என் மகனை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கதறி அழுதுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பானுமதியிடம் விசாரனை செய்த பிறகு காப்பகத்தில் இருந்த சிறுவனை தாய் பானுமதியிடம் ஒப்படைத்து குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் வளர்த்து படிக்க வைக்க வேண்டும். போலிசார் அழைக்கும் நேரங்களில் குழந்தையை அழைத்துவந்து காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.