
சென்னையில் தந்தை ஜீவ சமாதி ஆவதற்கு உதவியதாக கூறிய தாய் மீது மகள் போலீசில் புகாரளித்துள்ளார்.
சென்னை பெரும்பாக்கம், கலைஞர் நகர், 8வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் அந்தப் பகுதியில் சாமி ஆடி குறிசொல்லிவந்துள்ளார். இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், நாகராஜின் அறிவுறுத்தலின் பேரில் அவரது மனைவி அவரை உயிருடன் ஜீவ சமாதி செய்துள்ளார். வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள குழிக்குள் உயிருடன் நாகராஜை போட்டு மூடியுள்ளார். அதனையடுத்து, அப்பா எங்கே என நாகராஜின் மகளான தமிழரசி தாயிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு, தந்தையின் அறிவுறுத்தலின் பேரில் அவரை ஜீவ சமாதி செய்துவிட்டதாக ஐ.டி ஊழியரான மகள் தமிழரசியிடம் தாய் கூற, இதனால் அதிர்ந்த தமிழரசி, இதுதொடர்பாக சென்னை பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் நாகராஜின் மனைவியிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் உயிருடன் ஜீவ சமாதி ஆக்கப்பட்ட நாகராஜின் உடலை வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்க பெரும்பாக்கம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.