Skip to main content

மகன் சடலத்தை பார்த்ததும் உயிரிழந்த தந்தை... வேறு வழி தெரியாமல் உண்மையை ஒப்புக்கொண்ட விவசாயி!!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

  

Father who died when son saw corpse; The farmer who admitted the truth without knowing any other way

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது மேலந்தல் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் காசிநாதன் (30). விவசாயம் செய்துவந்த இவர் நேற்று முன்தினம் (13.06.2021) அதிகாலை தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்புக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளார். அப்படி செல்லும்போது அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் அவரது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி கிழங்கைக் காட்டு விலங்குகள் நோண்டி தின்பதால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது என தனது மரவள்ளிக்கிழங்கு நிலத்தைச் சுற்றிலும் காட்டு விலங்குகளைத் தடுப்பதற்காக மின்சார வேலி அமைத்திருந்தார்.

 

இதுகுறித்து விபரம் அறியாத அப்பாவி காசிநாதன் அந்த வழியாக தனது வயலுக்குச் செல்லும்போது பாஸ்கரின் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார். சிறிது நேரத்தில் தனது நிலத்திற்கு வந்த பாஸ்கர் தன் நிலத்தில் போடப்பட்ட மின்சார வேலியில் சிக்கி காசிநாதன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை மறைப்பதற்காக காசிநாதன் சடலத்தைத் தூக்கிச் சென்று காசிநாதனின் கரும்பு தோட்டத்தில் போட்டுவிட்டு வந்துள்ளார். இதனால் யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக காசிநாதன் சடலத்தின் மீது பூச்சி மருந்தும் தெளித்துள்ளார் பாஸ்கரன். அதன் பிறகு எதுவும் தெரியாதது போல்  வீட்டுக்குச் சென்றுவிட்டார். 

 

எப்படியும் காசிநாதன் இறந்தது வெளியே தெரியும். நம் மின்சார வேலியில் சிக்கி இறந்தார் என்பதைப் போலீசார் கண்டுபிடித்துவிட்டால் நாம் வேறு வழியில்லாமல் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலை வரும் என்று அவரது மனசாட்சி உறுத்தியது. இதனால் பயந்துபோன பாஸ்கர், மணலூர்பேட்டை காவல் நிலையம் சென்று சரணடைந்தார். காசிநாதன் தனது வயலில் அமைத்திருந்த மின்சார வேலியில் சிக்கி இறந்தது குறித்து விவரமாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் பாஸ்கர் அழைத்துச் சென்று காசிநாதன் கரும்பு தோட்டத்திற்கு அவரது சடலத்தைத் தேடி கைப்பற்றினார்கள். இந்த தகவல் அறிந்த காசிநாதனின் தந்தை சுப்பிரமணியம் தன் மகன் இறந்துபோன தகவல் கிடைத்ததும் மகன் சடலமாக கிடந்த கரும்பு தோட்டத்துக்கு ஓடி வந்துள்ளார். 

 

மகன் சடலமாக கிடப்பதைப் பார்த்த சுப்பிரமணியம் அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். பதறிப்போன அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மகன் இறந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் தந்தை மாரடைப்பால் இறந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காசிநாதனின் தாய் ராஜாமணி மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். காட்டு விலங்குகளுக்கு அமைக்கப்படும் மின்சார வேலியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் வடமாவட்டங்களில் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேதான் உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.