சிவகங்கை மாவட்டம் இளையான்டி ஒன்றியத்துக்கு உட்பட்டது கண்ணமங்கலம் ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த வகையில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் இந்த பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் இந்த பள்ளியில் மிக நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன் என்று கூறப்படுகிறது. இந்த மாணவன் 4ஆம் வகுப்பு முடித்து 5ஆம் வகுப்பு வகுப்பு சேரும் போது மாணவனைச் சாதிப் பெயரைச் சொல்லி வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் பல்வேறு வகையில் மனதளவில் தொல்லைகளைக் கொடுத்ததாக மாணவனுடைய தந்தை கருப்பசாமி என்பவர் முதல்வர் தனிப்பிரிவுக்குப் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில், “தாயை இழந்த சிறுவன் சித்தியின் பராமரிப்பில் கல்வி பயின்று வரக்கூடிய சூழலில் வகுப்பு ஆசிரியர் மணிமேகலை மாணவனை வகுப்பறையில் மற்ற மாணவர்களோடு அமர வைக்காமல் தனிமையில் அமர வைத்து மிகவும் தனிமைப்படுத்தியுள்ளார். தலைமை ஆசிரியர் அனுசுயா சாதியினை வைத்து அவமதிக்கும் நோக்கில் மாணவர் மற்றும் குடும்பத்தினரிடம் தரக்குறைவான முறையில் நடந்து கொண்டார். பள்ளி வளாகத்திற்குள் பெற்றோரை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். மாணவனை மீண்டும் பள்ளி வகுப்பறைக்குள் வரக்கூடாது என மிரட்டினர். அதோடு மாணவனை வலுக்கட்டாயமாக்க வேறு பள்ளிக்குப் படிக்க அழைத்துச் செல்லுங்கள். இந்த பள்ளியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம். உடனடியாக மாற்றுச் சான்றிதழ் (T.C.) வாங்கிக் கொண்டு செல்லுங்கள் எனத் தலைமை ஆசிரியர் மிரட்டினார்.
அவ்வாறு மாற்றுச் சான்றிதழ் வாங்கவில்லை என்றால் காவல்துறையில் புகார் அளித்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மாணவனைச் சேர்த்து விடுவோம் என தலைமை ஆசிரியர் கூறினார்” என முதல்வர் தனிப் பிரிவில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பள்ளி நிர்வாகத்தின் கண்டிப்பு மற்றும் மிரட்டல் காரணமாக வேறு வழியின்றி மாணவன் வேறு பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார். முதல்வர் தனிப்பிரிவுக்கு அளித்த புகார் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “சாதி ரீதியான துன்புறுத்தலில் தலைமை ஆசிரியர் அனுசுயாவும், ஆசிரியர் மணிமேகலையும் ஈடுபடவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் பிறப்பித்துள்ள உத்தரவில், “சம்பந்தப்பட்ட மாணவர் மீண்டும் கண்ணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர விருப்பப்பட்டால் இப்பள்ளியில் சேர்க்கை செய்வதற்குச் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியருக்கு அனுமதி வழங்க உத்தரவிடுமாறு இளையான்குடி வட்டாரக் கல்வி அலுவலருக்குத் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் பெற்றோர் தரப்போ வட்டார கல்வி அலுவலர் எங்களிடம் எந்த விதத்திலும் விசாரணை மேற்கொள்ளவில்லை. ஒரு தலைப்பட்சமாக விசாரணை மேற்கொண்டு அறிக்கையைக் கொடுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.