/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2853.jpg)
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள அங்கு செட்டிபாளையம் இருளர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(வயது 38), இவரது மனைவி சுமதி (வயது 32). கணவன், மனைவி இருவரும் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களது மகன் அர்ஜுன்(வயது 14), அங்குசெட்டிபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். முருகன் - சுமதி தம்பதிக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கவியரசு நகரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். முருகன் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லவில்லை. இரவு 10 மணிக்கு குடிபோதையில் வந்தவர் சுமதியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது மகன் அர்ஜுன், 'இப்படி தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்தால் எப்படி தூங்குவது' என கேட்டுள்ளார். அதற்கு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சுமதி அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். மகன் அர்ஜுனன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டை விட்டு வெளியே சென்ற முருகன் நள்ளிரவில் குடிபோதையில் வீடு திரும்பினார்.
வீட்டில் மனைவிதான் தூங்குகிறார் என நினைத்த முருகன் வீட்டிற்கு வெளியே கிடந்த அம்மிக்கல்லை தூக்கி அவர் தலையில் போட்டார். இதில் அர்ஜுனன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவிக்கு பதில் மகனை கொன்று விட்டோமே என்ற பீதியில் முருகன் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓட முயன்ற முருகனை பண்ருட்டி பேருந்து நிலையத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)