பெங்களூருகுதிரைக்கரை பகுதியைச்சேர்ந்தவர் டைல்ஸ் வியாபாரி மாதவன். தனது மனைவி ரோஜா மற்றும் மகன்கள் சிவா, குமரேசன் ஆகியோருடன் சென்னை மணலியில் தனது மகன் குமரேசனுக்கு பெண் பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நோக்கி கார் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரியிலிருந்து குடியாத்தம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது.
இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டவிபத்தில், குடியாத்தம் தாழையாத்தம் பஜார் பகுதியைச் சேர்ந்தசரவணன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மாதவன் மனைவி ரோஜா அவரது மகன் சிவா உட்படமூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 4 பேரை ஆம்பூர் கிராமிய போலீசார் மற்றும் பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரைச் சேர்ந்த மாதவன்மற்றும் அவரது மகன் குமரேசன், குடியாத்தம் தாழையாத்தம் பஜார் பகுதியைச் சேர்ந்த சாந்தி மகன் மைத்ரேயன் உள்ளிட்ட 4 பேர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு விபத்து குறித்து விசாரணை நடத்தினார். விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு வெவ்வேறு குடும்பங்கள் தங்கள் குடும்ப நிகழ்வுகளுக்கு குடும்பத்தினருடன் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கணவன், மகன் கண் முன்னே மனைவி மற்றும் இன்னொரு மகன் இறந்ததும், மற்றொரு காரில் வந்த மனைவி மகன், கண் முன்னே கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.