father and son passes away near kallakurichi

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ளது முதலூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் 60 வயது பக்கிரிசாமி, இவரது மகன் 28 வயது பாண்டியன். இவரது மகன் பாண்டியன், பக்கிரிசாமி வீட்டில் வைத்திருந்த 500 ரூபாய் பணத்தை எடுத்துச்சென்று வீண் செலவு செய்துள்ளார். இதை அறிந்த பக்கிரிசாமியின் மனைவி அனீஷா, கரோனா காரணமாக வேலைவாய்ப்பு இல்லை. போதிய வருமானம் இல்லை. குடும்பம் நடத்துவதற்கு மிகவும் சிரமமாக உள்ள இந்த நேரத்தில் 500 ரூபாய் எடுத்து சென்று வீண் செலவு செய்யலாமாஎன்று மகனை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த பாண்டியன், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்று அங்கு தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது உடல் முழுவதும் தீ பரவியது. அதன் வெப்பம் தாங்க முடியாமல் பாண்டியன் கூச்சலிட்டு உள்ளார். அவரது கூக்குரல் சத்தம் கேட்டு அவரது தந்தை பக்கிரிசாமி ஓடிச்சென்று பாண்டியன் உடலில் பற்றிய தீயை அணைக்க முயன்றார்.

Advertisment

அப்போது பக்கிரிசாமி மீதும் தீ பரவியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களின் குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் ஓடிச்சென்று தந்தை, மகன் இருவரது உடலிலும் பற்றி எரிந்த தீயை கடும் முயற்சிக்கு பிறகு அணைத்தனர். பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் இருவரையும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு இருவருக்கும்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தந்தை மகன் இருவரும் இறந்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் டி.எஸ்.பி ராஜி, உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், உலகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீக்குளிக்க முயன்ற மகனை காப்பாற்ற சென்ற தந்தையும் சேர்ந்து தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 500 ரூபாய் செலவு செய்த சின்ன விஷயத்திற்காக பெற்ற தாய் கண்டித்ததைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபத்தின் காரணமாக தீக்குளித்து தானும் இறந்து தனது தந்தையும் இறக்கும் நிலையை உருவாக்கிவிட்டது ஒரு இளைஞரின் சிறு கோபம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.