
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் உயர்நீதிமன்றம் 12 வாரத்தில் வழக்கை முடிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் சீமான் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
சம்மனில் குறிப்பிட்டிருந்த படி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இருப்பினும் அவர் கட்சிப் பணிக்காகச் சென்றிருப்பதாகக் கூறி அவரது சார்பில் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இதன் காரணமாக நாளை (28.02.2025) காலை 11 மணிக்கு சீமான் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள வீட்டில் சம்மனை ஒட்டினர். அதில், ‘விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது வீட்டில் இருந்து வந்த நபர் ஒருவரால் கிழிக்கப்பட்டது.
இந்த சம்மனை கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளர் சீமான் வீட்டுக் காவலாளி உள்ளே விடாமல் தடுத்துள்ளார். இந்நிலையில் சீமானின் வீட்டிற்குள் நுழைய முயன்ற போலீசாரை தாக்கியதாக வீட்டுக் காவலாளி கைது செய்யப்பட்டார். காவலாளி வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்து இழுத்து சென்றனர்.

சீமான் வீட்டில் காவலாளியாக இருந்தவர் அமல்ராஜ். இவர் எக்ஸ் ஆர்மி மேன். இந்நிலையில் கைதான அமல்ராஜின் மனைவி செய்தியாளர்களை சந்திக்கையில், ''ஒரு டேடி மட்டும் தனியாக வீட்டில் இருக்கும் பொழுது உள்ளே அனுப்பாமல் என்ன விஷயம் என கேட்டதற்கு அவருடைய சட்டையை பிடித்து இழுத்து சென்று கைது செய்துள்ளார்கள். இதுதான் ஜனநாயகமா? எல்லை பாதுகாப்பு படைவீராக இருந்த என் கணவர் அவருடைய வேலையை தான் செய்துள்ளார். துப்பாக்கியை காட்டி யாரையும் அவர் மிரட்டவில்லை. அவர்கள் தம் கையில் இருந்த துப்பாக்கியை வாங்கி கொள்ளுங்கள் என கொடுக்க முயன்றுள்ளார். 25 வருடம் ஆர்மியில் வேலை செய்துவிட்டு வந்தவர். 2018-ல் இருந்து லைசென்ஸ் துப்பாக்கி வைத்திருக்கிறார். நிறைய இடங்களில் வேலை பார்த்துள்ளார். இரண்டு வருடமாக சீமானிடம் வேலை செய்து வருகிறார். எல்லைப் பாதுகாப்பு படை வீரராக இருந்த என் கணவர் கடமையை தான் செய்துள்ளார்.
பாதுகாப்புக்கு இருந்தவரை இப்படித்தான் இழுத்துக்கொண்டு வருவீர்களா? என்ன ஒரு அராஜகம். என் கணவர் துப்பாக்கி ஒப்படைக்க சென்றதை மாற்றி மிரட்டியதாகக் கூறுகிறார்கள். கிரிமினல் குற்றவாளி போல இழுத்து வருகிறார்கள். என் தரப்பில் கண்டிப்பாக புகார் கொடுப்பேன். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதுதான் அரசுக்கு என்னுடைய கோரிக்கை''என்றார்.