ADVERTISEMENT

நாகையில் கடலில் இறங்கி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது!

04:19 PM May 15, 2018 | Anonymous (not verified)


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, நாகையில் மேலாடைகளை களைந்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடலில் இறங்கி தற்கொலை போராட்டத்திற்கு சென்று கைதாகியுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று 15ம் தேதி நாகையில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து, கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக செல்ல தயாராகினர். போலீசார் அனுமதி மறுக்க, ஆவேசமடைந்த விவசாயிகள் திடீர் என மேலாடைகளை களைந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை வலுகட்டாயமாக கைது செய்தனர்.

அப்போது போராட்டக் காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதால், அங்கு பெரும் பாபரப்பு நிலவியது. பின்னர் மேலாடைகளை களைந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர். விவசாயிகளின் தற்கொலை போராட்டம் காரணமாக முன்னதாக நாகை கடற்கரையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக முதல்வரை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை கேட்டு பெறுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT