Skip to main content

திமுக நிர்வாகி மீது உதயநிதியிடம் நேரில் புகார் கொடுத்த விவசாயிகள்

Published on 01/05/2023 | Edited on 01/05/2023

 

Farmers who complained in person to Udayanidhi against the DMK executive

 

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளுக்கு எதிராகச் செயல்படும் திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை சேலத்தில் நேரில் சந்தித்து ஈரோடு மாவட்ட விவசாய அமைப்பினர் புகார் மனு கொடுத்துள்ளார்கள்.

 

இதுபற்றி தற்சார்பு விவசாயிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் கூறும்போது, "திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியின் மாநிலச் செயலாளரும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலினை நேற்று 30 ஆம் தேதி மாலை சேலத்தில் அவர் தங்கியிருந்த விடுதியில் விவசாயிகள் அமைப்பு பிரதிநிதிகளான நாங்கள் 15 பேர் கொண்ட குழுவினர் சந்தித்தோம். ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் கீழ்பவானி கால்வாயில் சீரமைப்பு வேலைகளுக்காக வழங்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், அந்தத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், செந்தில்பாலாஜி போன்றவர்களின் ஒத்துழைப்பு குறித்து சொன்னோம்.

 

அதேபோல் உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த விடாமல் அதிகாரிகளை குழப்பி வருகிற திமுகவின் மாநில சுற்றுச்சூழல் அணியின் செயலாளரும் தமிழ்நாடு அரசின் புலம்பெயர் நல வாரியத்தின் தலைவர் என்ற பொறுப்புகளில் உள்ள கார்த்திகேய சிவ சேனாபதி அவர்களின் தவறான செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துச் சொன்னோம். அதற்கான ஆவணங்களையும்,மனுவாக அவரிடம் கொடுத்தோம். எங்கள் குழுவினர் முன்வைத்த கருத்துக்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொண்டு இந்த வேலைகள் சிறப்பாக நடைபெறுவதற்கு அரசின் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார். சந்திப்பிற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏற்பாடு செய்து உதவினர் அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறோம்." என்றார்.

 

திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ள சுற்றுச்சூழல் அணியின் செயலாளரும் தமிழக அரசின் புலம்பெயர் நல வாரிய அமைப்பின் தலைவர் கார்த்திகேய சிவ சேனாதிபதி தமிழக அரசின் திட்டத்திற்கு எதிராக நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் செயல்படுகிறார் என அவர் மீது அமைச்சர் உதயநிதியிடம் நேரில் புகார் கூறிய இந்த சம்பவத்தால் விவசாயிகள், திமுகவினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்