திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அனைத்து விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் உள்ளே நுழையும் போது விவசாயிகள் அனைவரும் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கையில் திருவோடு ஏந்தி வந்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் தமிழகத்தில் இந்த திட்டத்திற்கு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் முக்காடு போட்டு திருவோடு ஏந்திய கோலத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றனர். அவர்களை திருவோட்டுடன் உள்ளே அனுமதிக்க முடியாது என கண்டோன்மென்ட் போலீசார் தடுத்தனர்.

இதனால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு விவசாய சங்க தலைவர் விஸ்வநாதன் மற்றும் அவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் உள்ளே சென்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தும் மனுவை கலெக்டரிடம் விஸ்வநாதன் கொடுத்தார். அப்போது அவர் கையில் திருவோடு ஏந்தி மனுவை கொடுத்தார் பின்னர் அவர் கூட்டத்தில் கலந்து கொண்டார். விவசாயிகள் முக்காடு போடு திருவோடு ஏந்தி சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.