
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உற்பத்தி செய்யப்படும் பூக்கள் அன்றாட தேவைகளுக்கு போதுமானதாக இருந்தது. மேலும் திருச்சி, மதுரையில் போன்ற இடங்களில் இருந்து ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பூ உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைத்தது. தேக்கமடையவில்லை.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக சில வியாபாரிகள் பூக்களின் உற்பத்தி அதிகம் வரவேண்டும் என்று நினைத்து நாட்டு ரக பூக்களுக்கு பதிலாக அதே ரகங்களில் ஹைபிரிட் பூ நாற்றுகளை விவசாயிகளுக்கு வாங்கி கொடுத்து உற்பத்தி அதிகமாகும் என்று ஆசையும் காட்டியதன் விளைவும் தற்போது உற்பத்தி அதிகமாக இருந்தாலும் உற்பத்தியாகும் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் வீதிகளிலும் குப்பைகளிலும் கொட்டி வாசம் வீசும் மலர்கள் இன்று நாற்றமாகி போனது. இதனால் பூ விவசாயிகள் உற்பத்தி செலவுக்கே பூ விற்பனை செய்ய முடியாமல் கடன் வாங்கி வேதனைப்பட்டு வருகின்றனர்.
இதே போல, புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமான பூ உற்பத்தி செய்யும் கீரமங்கலம் சுற்றியுள்ள 50 கிராமங்களில் ஒவ்வொரு நாளும் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, செண்டி என ஏராளமான வகை பூக்களும் மிகப் பெரிய வியாபார சந்தையான கீரமங்கலம் கொண்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் குறைந்தது 10 டன் வரை பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சுப முகூர்த்த நாட்களில் நல்ல விலைக்கு விற்பனையாகும் பூக்கள் மற்ற நாட்களில் மிக குறைந்த விலைக்கு கூட விற்பனையாகாமல் குப்பைகளில் கொட்டப்படுகிறது. அந்த குப்பைகளையும் சம்மந்தப்பட்ட பேரூராட்சி குப்பை வண்டிகளில் ஏற்றிச் செல்லாததால் சாலை ஓரங்களில் அழுகி துர்நாற்றம் வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அழுகிய பூக்களை வெளியேற்ற வியாபாரிகள் வாடகை வாகனங்களில் ஏற்றிச் சென்று கொட்டி வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும் போது, கீரமங்கலம் பகுதியில் சுமார் 40, வருடங்களுக்கு மேலாக பூ உற்பத்தி உள்ளது. நாட்டு ரக பூக்கள் தான் உற்பத்தி செய்தோம். பருவ காலத்திற்கு ஏற்ப பூ ரகங்கள் உற்பத்தி செய்யப்படும். அதற்கு உரிய விலையும் கிடைத்தது. தேக்கமடையாது.
ஆனால், சில பூ கடைகாரர்கள் உற்பத்தி அதிகமாக்க வேண்டும் என்று முதலில் ஹைபிரிட் செண்டிப் பூ செடிகளை விவசாயிகளிடம் வாங்கிக் கொடுத்தனர். அதுவரை கோயில்களிலும் சென்டிப்பூக்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் ஹைபிரிட் செண்டி வந்ததும் அதை கோயிலுக்கு பயன்படுத்துவதை தடை செய்துவிட்டனர். இறப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாகிப் போனதால் ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் தேங்கும். அதே போல, சம்பங்கி பூவிலும் ஹைபிரிட் நுழைக்கப்பட்டு இப்ப கிலோ ரூ.5க்கும் 10க்கும் வாங்கும் வியாபாரிகள் விற்க முடியாமல் குப்பைக்கு அனுப்புகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவே நட்டம் ஏற்படுகிறது. நாட்டு ரக பூக்கள் இருக்கும் வரை தேக்கமில்லை ஹைபிரிட் வந்த பிறகு தான் இப்படி தேங்கி மனம் வீச வேண்டிய மலர்கள் நாறுகிறது என்கின்றனர் வேதனையாக.