/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sivagiri-couple-art_1.jpg)
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி, உச்சிமேடு அடுத்த வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம்மாள். விவசாயிகளான இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவரது மகன் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இத்தகைய சூழலில் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த கணவன், மனைவி இருவரிடமும் அவரது மகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த 1ஆம் தேதி (01.05.2025) இரவு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது கணவன் ராமசாமி வீட்டிற்கு உள்ளேயும், மனைவி பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியேயும் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட எஸ்பி. சுஜாதா சிவகிரி எஸ்.எஸ்.ஐ. அர்ஜுனன், பெருந்துறை டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன், மனைவி என இருவரும் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் சிவகிரி சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sivagiri-pro-art.jpg)
அதே சமயம்ஈரோடு மாவட்ட ஏ.டி.எஸ்.பி. தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வயதான தம்பதியர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் சிவகிரியில் இன்று (04.05.2025) கருப்பு கொடியை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “இந்த சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். காவல் துறையின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். எனவே விவசாயிகளான தங்களது சொத்துக்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு இலவசமாக ஆயுதங்களை வழங்க வேண்டும்” என பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
Follow Us