
காட்டுமன்னார்கோவில் வீரனந்தபுரம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக வீடுகளை அகற்றுவது சம்பந்தமாக ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளை இடிக்க அதிகாரிகள் வந்துள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும்போது, காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதுதொடர்பாக காவேரி டெல்டா பாசன விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் தங்க.தர்மராஜன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “காவிரி டெல்டா பாசன விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பச்சை துண்டு அணிந்து விவசாயிகளுக்காகப் போராடி வருபவர். ஒரு பொது நோக்கத்திற்காக ஒரு வாரத்திற்கு முன்னர் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பேசியுள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவரும் அவரது கோரிக்கைக்கு உறுதி கொடுத்துள்ளார்.
அதன் பின், விவசாயிகளின் வீடுகள், நிலங்களை இடிக்க அதிகாரிகள் வந்தபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகளுக்காக இளங்கீரன் பரிந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, காட்டுமன்னார்கோயில் காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒரு விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன், பொதுநோக்கத்திற்காக சென்றவரை காவல்துறை அதிகாரிகள் கைநீட்டி அடிப்பது என்பது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த முறைகேடான தவறான செயலை உடனடியாக கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் எவ்வித பிணையுமின்றி உடனே விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரனை விடுதலை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.