விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வரும் 2,000 ரூபாய் உதவித்தொகை பெற, ஆதார் அட்டையில் உள்ளபடி மத்திய தரவு தளத்தில் பெயர்களை உள்ளீடு செய்ய வேண்டும் எனஅரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிரதமர் கிஸான் சம்மான் நிதி திட்டமானது, கடந்த 2018- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயிர் சாகுபடிக்குத் தேவையான இடுபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான உதவித்தொகை விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது மூன்று தவணைகளில் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், நான்காம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில், ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 832 விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக இதுவரை 101.29 கோடி ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு உள்ளது.
தற்போது நான்காம் தவணை பெற, ஆதார் அட்டையில் உள்ளபடி மத்திய வலைத்தளத்தில் பெயர் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, இதுவரை மூன்று தவணைகள் பெற்று, நான்காம் தவணை பெறாத விவசாயிகள் உடனடியாக அருகில் உள்ள பொதுச் சேவை மையம் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி ஆதார் அட்டையில் உள்ளவாறு பெயரைத் திருத்தம் செய்து விண்ணப்பித்து பயனடையலாம்.
இவ்வாறு சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பாலையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.