Skip to main content

லாரிகள் வேலை நிறுத்தத்தால் நெல் விற்பனை நிறுத்தம் - விவசாயிகள் வேதனை! 

Published on 22/07/2018 | Edited on 27/08/2018
ri

 

குறுவை சாகுபடியில் நெல் அறுவடை அதிகரித்துள்ளது. இதனால்  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தினந்தோறும் 10000-த்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளின் வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் லாரிகளின் வேலை நிறுத்த போராட்டத்தால், உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் நெல் மூட்டைகளை ஏலம் எடுப்பதை தவிர்த்துள்ளனர். இதனால் ஒழுங்கு முறை விற்பனை கூட நிர்வாகிகள் லாரிகளில் வேலை நிறுத்த போராட்டம் முடியும் வரை நெல்லுக்கு மட்டும் விற்பனை கிடையாது என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த விவசாயிகள் என்ன செய்வதன்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.

 

nel

 

இதுகுறித்து மாணிக்கத்தை சேர்ந்த விவசாயி செல்லபெருமாள் கூறுகையில்,
"கடந்த மூன்று மாதங்களாக இரவு பகலாக கஷ்டப்பட்டு அறுவடை செய்து, விற்பனைக்காக ஒழுங்கு முறை கூடத்துக்கு வந்தால், லாரிகள் வேலை நிறுத்தம் என கூறி நெல் வியபாரிகள் நெல்லை கொள்முதல் செய்யமுடியாது என்கின்றனர். 


லாரிகள் வேலை நிறுத்தத்தை  சாதகமாக ஆக்கி கொள்ளும்  வியாபாரிகள் நெல்லின் விலையை குறைத்து விவசாயிகள்  வயிற்றில் அடிக்கிறார்கள். கடந்த வாரம்  1400 வரை விலை போன நெல்லானது தற்போது 1000 ரூபாய்க்கு குறைவாக கேட்கிறார்கள்.  இதே நிலை நீடித்தால், தங்களின் நிலத்தை விற்று தான் குடும்பத்தை காப்பாற்றுவதுடன், கடன் சுமைகளிலிருந்தும் மீள முடியும்" என்றும் மனவேதனையுடன் கூறுகிறார். 

 

மருங்கூரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  "நெல்லை அறுவடை செய்வதற்கே ஏக்கருக்கு  15000 வரை செலவு ஆகிறது. இந்த நெல்லை விற்றுதான் ஆள்கூலி, வண்டி வாங்கிய லோன் உள்ளிட்ட கடன்களை அடைக்க வேண்டும்.  நெல்லை கொள்முதல் செய்யும் வியபாரிகள் லாரிகள் வேலை நிறுத்தத்தால் நெல்லை விறபனைக்கு எடுத்தால் தங்களுக்கு நஷ்டம் ஆகும் என்று  கொள்முதல் செய்ய மறுக்கிறார்கள். இதனால் எல்லா வகையிலும் நஷ்டம் அடைவது விவசாயிகள் தான் என்றார்.

 

மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதுடன், வியாபாரிகள் சின்டிகேட் அமைத்து நெல் விலையை குறைவாக கொள்முதல் செய்வதை தடுத்து விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வழி வகை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றனர் விவசாயிகள்.
 

சார்ந்த செய்திகள்