Skip to main content

நெடுவாசலைப் போல வலுவடையும் நாகுடி கடைமடை விவசாயிகள் போராட்டம்! விழிபிதுங்கி நிற்கும் அதிகாரிகள்!

Published on 24/08/2018 | Edited on 25/08/2018
nagudi


    நெடுவாசலில்.. விளை நிலத்தையும், விவசாயிகளையும், நிலடித்தடி நீரையும்.. ஹைட்ரோ கார்ப்பன் என்றும் இயற்கை எரிவாயு திட்டத்திடமிருந்து காப்பாற்ற 197 நாட்கள் விவசாயிகள், அரசியல் கட்சிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் திரண்டு வந்து போராடினார்கள். இந்தப் போராட்டம் தமிழகம் மட்டுமின்றி கடல் கடந்த தேசத்திலும் எதிரொலித்தது. இந்த நெடுவாசல் போராட்டம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. மக்கள் போராட்டத்தின் விளைவு நெடுவாசல் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் எடுத்த கர்நாடக ஜெம் நிறுவனம் எனக்கு நெடுவாசல் வேண்டாம் என்று சொல்ல வைத்தது. இன்று வரை யாரும் நெடுவாசலுக்குள் நுழையமுடியவில்லை.

 

nagudi


    இந்த நிலையில் தான் கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மேட்டூருக்கு தண்ணீர் வரத்து அதிகரித்திருந்த நிலையில் கல்லணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணையும் திறக்கப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்த சில நாட்களில் தஞ்சை கல்விராயன்பேட்டை கிராமத்தில் கரை உடைந்து தண்ணீர் வீணாக போனது. அதன் பிறகு கொள்ளிடத்தில் தண்ணீரை திறந்து கடலுக்கு விட்டார்கள். கல்லனை கால்வாய்க்கு தண்ணீர் அனுப்புவது குறைந்தது. இவ்வளவு தண்ணீர் இருந்தும் கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை. அதனால் டெல்டா மாவட்டங்களில் தினசரி போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்.  

 
     புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கல்லணை பாசனம் உள்ள கடைமடை பகுதிகளுக்கு சில நாட்கள் வரும் தண்ணீரை நம்பி விதைத்த நெல்லும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கொடு என்று விவசாயிகள் வைத்த கோரிக்கை அதிகாரிகளுக்கு எட்டவில்லை. ஆலங்குடி தி.மு.க ச.ம.உ வல்லவாரியில் விவசாயிகளை திரட்டி போராட்டக் களம் அமைத்த நிலையில் அங்கு வந்த அதிகாரிகள் தண்ணீர் வரும் என்று எழுதிக் கொடுத்தார்கள். அதனால் போராட்டம் கைவிடப்பட்டது. அடுத்த சில நாட்களில் நாகுடிக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் விவசாயிகளிடம் நாகுடிக்கு தினசரி 300 கனஅடி தண்ணீர் வரும் என்று உறுதியளித்தார். ஆனால் 100 கனஅடி கூட தண்ணீர் கிடைக்கவில்லை. அப்பகுதியில் உள்ள 160 பாசன ஏரி, குளங்களுக்கு தண்ணீர் எட்டிக்கூட பார்க்கவில்லை.

 

n

 

அதனால் அமைச்சர் சொன்னபடி தினசரி 300 கன அடி தண்ணீர் வந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கைக்கு நல்ல தீர்வு கிடைக்கவில்லை. கடந்த மாதம் மராமத்து பார்த்த்தாக பணம் எடுக்கப்பட்டுள்ள கல்லணை கால்வாய் கரை பலமாக இல்லை என்று அதிகாரிகள் கூறிவந்தனர்.  அதனால் தான் நாகுடி பகுதி கடைமடைப் பாசன விவசாயிகள் 22 ந் தேதி காலை முதல் நாகுடி கல்லணை கால்வாய் அலுவலகத்தின் முன்னால் திரண்ட விவசாயிகள் கடைமடைக்கு தண்ணீர் வரும் வரை காத்திருக்கிறோம் என்று போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டம் வெள்ளிக் கிழமையுடன் 3 வது நாளையும் கடந்தது.

 

n


முதல் நாளில் சுமார் 200 விவசாயிகளுடன் தொடங்கிய போராட்டம் நெடுவாசல் போராட்டம் போல நாளுக்கு நாள் அதிகரித்து 3 வது நாளில் சுமார் 1000 விவசாயிகள் பங்கேற்ற பிரமாண்ட காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. போராட்டப் பந்தலுக்கு வருவோர்க்கு எல்லாம் தண்ணீர், மோர் வழங்கப்பட்டதுடன் மதிய உணவும் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இப்டித்தான் நெடுவாசலில் ஆர்வத்தோடு போராட்டக் களத்திற்கு வந்தவர்களுக்கு மதிய உணவு கொடுத்து ஆட்டம் பாட்டத்துடன் திருவிழா போல போராட்டம் நடந்தது. நாட்கள் ஆக ஆக நாகுடியிலும் அப்படித் தான் நடக்கும் என்றவர்கள் நாளை கல்லூரி மாணவர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாகுடி போராட்டக் களத்திற்கு வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் வர்த்தக நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த அறிவித்துள்ளனர். 

 

போராட்டத்தின் முதல் நாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு ஆறுகள் தூர்வாராமலேயே பணத்தை எடுத்துவிட்டார்கள். இவ்வளவு தண்ணீர் இருந்தும் விவசாயிகளுக்கு பயனில்லாமல் கடலில் கலந்துவிட்டது. தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த அவல நிலை என்றார்.

 

n


முதல் நாள் போராட்டத்தில் இருந்து தினசரி போராட்டம் நடக்கும் ஆற்றங்கரை ஆலமரத்தடிக்கு அறந்தாங்கி தொகுதி அ.ம.முக. எம்.எல்.ஏ ரெத்தினசபாபதி விவசாயிகளுடன் இருந்து அங்கேயே மதிய உணவையும் சாப்பிட்டு தண்ணீர் கிடைக்கும் வரை காத்திருப்போம் என்று கூறியதுடன்.. 
அமைச்சர் சொன்னார் அதிகாரிகள் கேட்கவில்லை. இனியும் அதிகாரிகளை நம்பி பயனில்லை. எனக்கு ஓட்டுப் போட்ட விவசாயிகளுக்காக நானும் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். இந்த போராட்டம் இப்படியே போகாது இன்னம் வலுவடையும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் போல நடக்கும். அதற்குள் இந்த அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைநிலை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். நாங்கள் போகவில்லை. நிச்சயம் கடைமடையில் நாகுடிக்கு தினசரி 300 கனஅடி தண்ணீர் கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது என்றார்.

 

u


ஆதரவு கரம் நீட்டி வந்த மாஜி தி.மு.க எம்.எல்.ஏ உதயம் சண்முகம்.. நான் எம்.எல்.ஏ வாக இருந்த போதும் இப்படி தண்ணீர் இல்லாமல் போராட்டம் நடத்தினோம். இப்போது விவசாயிகள் கையிலெடுத்திருக்கும் இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும். நாகுடியில் மட்டும் போராடாமல் சென்னை சென்று போராட்டம் நடத்தவும் அதற்காக ஆட்களை கொண்டு போகவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

 
நாகுடி பகுதி விவசாயிகள் கூறும் போது.. தினசரி 300 கனஅடி தண்ணீர் வந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். ஆனால் அமைச்சர் சொன்ன பிறகும் தண்ணீர் கொடுக்காத நிர்வாகம் முறை வைத்து தண்ணீர் திறக்கிறது. இதனால் விவசாயிகள் கடனை வாங்கி விதை விதைத்து நாற்றங்காலிலேயே கருகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும் எங்கள் போராட்டத்திற்கு மாணவர்களும், இளைஞர்களும் அதிகமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். நாளை கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த வருகிறார்கள். விரைவில் நெடுவாசல் போல போராட்ட வடிவங்கள் மாறலாம். நீடிக்கலாம் என்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் ஒரு போராட்டக் களமா என்று அதிகாரிகள் வழிபிதிங்கி நிற்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள். 

Next Story

ஒரு ரோட்டுக்கு 2 டெண்டர்கள்! அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் மக்கள் வரிப்பணம்!

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு ரோடு போட ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் பூமி பூஜை போட்ட பிறகு அதே ரோட்டில் ரூ.5 லட்சத்திற்கு சிமென்ட் சாலைப் பணிக்கு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியுள்ள அவலம் நடந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் இருந்து கீரமங்கலம், செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின், வேம்பங்குடி மேற்கு ஊராட்சி வரை சென்று கீரமங்கலம் - பேராவூரணி சாலையில் இணையும் சுமார் 3 கி.மீ இணைப்பு கிராமச் சாலை உள்ளது. இந்தச் சாலையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மேம்பாட்டுச் சாலை (ஆர்.ஆர்) திட்டத்தில் இணைத்து நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.1 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வந்து சாலைப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடத்தினர். மழைக்காலம் என்பதால் சாலைப் பணி தாமதம் செய்யப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில் பணிகள் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தான் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் பேராவூரணி சாலையில் (ஆர்.ஆர்.க்கு ஒப்படைக்கப்பட்ட சாலை) இருந்து சுமார் 200 மீட்டர் நீலத்திற்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சாலையில் தான் ஆர்.ஆர். சாலையும் வரப்போகிறது. அதாவது தற்போது அவசர கதியில் போடப்படும் சிமெண்ட் சாலையில் இன்னும் சில நாளில் ஆர்.ஆர். சாலைப் பணிக்காக உடைத்துவிட்டு தார்ச்சாலை போடப் போகிறார்கள். இதனால் மக்கள் வரிப்பணம் ரூ.5 லட்சம் வீணாகப் போகிறது.

2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு சாலை நெடுஞ்சாலைக்கு ஒப்படைத்து அந்த சாலை பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்ட பிறகு ஊராட்சி ஒன்றியம் எப்படி சிமெண்ட் சாலைக்கு நிதி ஒதுக்கி டெண்டர் விட்டது? இப்போது போடப்படும் சிமென்ட் சாலையை தார்ச்சாலை போட வருபவர்கள் உடைத்துவிடுவார்களே என்று அறந்தாங்கி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டால், வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் யூனியனில் இருந்து எந்த வேலையும் நடக்கலயே என்று சொன்ன ஒன்றிய அதிகாரிகள் சிறிது நேரத்திற்கு பிறகு அது அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணியாம் என்றனர். எந்தப் பணியானாலும் அதே சாலைக்கு மற்றொரு டெண்டர் விடப்பட்ட பிறகு அதில் சிமெண்ட் ரோடு வேலை செய்தால் அந்தப் பணம் வீணாகாதா? என்ற நமது கேள்விக்கு ஒன்றிய அதிகாரிகளிடம் இருந்து பதில் இல்லை.

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஆர் திட்டப் பொறியாளர் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, எங்களிடம் ஒப்படைத்த சாலையில் வேறு யாரும் பணி செய்யக் கூடாது. ஒன்றிய நிதியில் வேலை நடப்பது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட திட்ட அலுவலர் கவனத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டோம். இனிமேல் அவர்கள் வேலை செய்யமாட்டார்கள். எங்கள் டெண்டர் படி முழுமையாகத் தான் தார்ச்சாலை போடுவோம் என்றார். ஆனால் இன்று வரை தற்காலிக சிமென்ட் சாலைக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, ரொம்ப வருசமா குண்டும் குழியுமா கிடந்த ரோட்டுக்கு இப்ப ஆர்.ஆர்.ல நிதி ஒதுக்கின பிறகு பஞ்சாயத்தில் இருந்து சிமென்ட் ரோடு போடுறாங்க. இவங்க போட்ட ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் சில நாளில் உடைச்சுட்டு தார் ரோடு போடப் போறாங்க. கேட்டா மரம் நிக்கிது தார் ரோடு உடைஞ்சிடும்ன்னு சொல்றாங்க. ஆனா ஆர்.ஆர். ரோட்டுக்காரங்க எங்களுக்கு ஒதுக்குன அளவு ரோடு போடுவோம்னு சொல்றாங்க. இதனால ஒரு ரோடு போட்டு பில் எடுத்ததும் ஒரு வாரத்தில் உடைக்கப் போறாங்க. மக்கள் வரிப்பணத்தை இந்த அதிகாரிகள் எப்படி வீணடிக்கிறாங்கன்னு பாருங்க. சிமென்ட் ரோட்டை வேறு ஒரு தெருவில் கூட போடலாம் என்கின்றனர்.

இதே போல தான் கறம்பக்குடி ஒன்றியத்தில் கருக்காகுறிச்சி தெற்கு தெருவில் ஒரு தனி நபரின் பட்டா இடத்தில் சுமார் 50 மீ பேவர் பிளாக் ரோடு போட வந்த போது நிலஉரிமையாளர் தடுத்து யாருக்குமே பயன்படாமல் என் நிலத்தில் போட வேண்டாம் என்று சொன்ன போது இன்று ரோடு போடுறோம் ஒரு வாரத்தில் பில் எடுத்ததும் நீங்க ரோட்டை உடைச்சுட்டு விவசாயம் பண்ணுங்கனு சொல்லி இருக்கிறார்கள். அதாவது அரசு பணத்தை பில் போட்டு எடுக்கத்தான் டெண்டர்கள் கொடுக்கிறார்களா அதிகாரிகள்? என்ற கேள்வி சில சம்பவங்களில் இருந்து எழுந்துள்ளது.