
தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்டா மாவட்டங்களில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. இதுபோல் கடலை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல நாட்களாக வீடுகள் மற்றும் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர்.
அந்தவகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னேற்பாடாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பேரணியாக வந்த விவசாய சங்கத்தினரோ காவல்துறையினரின் தடுப்புகளை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இந்த சூழலில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழுமைபெறாமல் போனதால் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து சாலையில் சாமியான பந்தல் அமைத்து விவசாயிகள் மற்றும் அந்த சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் விவசாய சங்கத்தினர் ஏராளமான பெண்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.
போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், "தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் ஏக்கரில் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக் கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு இதுவரை நிவாரணம் வழங்காதது வேதனை அளிக்கிறது, அதே நேரம் மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட இடைக்கால நிவாரணத் தொகையை மத்திய பாஜக அரசு உடனடியாக வழங்க வேண்டும். நிவாரணத்தை முதலமைச்சர் அறிவிக்கும் வரை தங்கள் காத்திருப்பு போராட்டம் இரவு பகலாக தொடரும்" என்றார்.