/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/108_56.jpg)
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவில் வெள்ளாளங்கோட்டை, தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், பணிக்கர் குளம் என 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தனியார் நிறுவனங்கள் விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி சோலார் பேனல்கள் மற்றும் காற்றாலைகளை நிறுவி மின் உற்பத்தி செய்து வருகின்றன. இதன் காரணமாக விவசாய கருவிகளையும், உற்பத்தியான விளைபொருட்களையும் எடுத்துச் செல்ல முடியாமல், தடையின்றி தங்கள் விளைநிலங்களுக்குச் சென்றுவர முடியாமலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இருப்பினும், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் தடையின்மை சான்று பெற்று பல்வேறு தனியார் நிறுவனங்கள், கிராமப்புறங்களில் உள்ள பொது நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள், சாலை புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்து உயர் மின் கோபுரம் மூலம் மின்பாதை அமைக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த மே 30 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அளித்த தடையின்மை சான்றின்படி டாடா பவர் ரினிவபில் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் சோலார் பவர் பிளான்ட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கயத்தாறு துணை மின் நிலையத்துக்கு எடுத்துச் செல்வதற்கான உயர்மின் கோபுரம் மின்பாதை அமைக்கும் பணி சூரிய மினுக்கன் பெரியகுளம் கண்மாய், தொண்டைமான் கண்மாய் மற்றும் ஓடை புறம்போக்கு பகுதிக்குள் நடைபெறுகிறது. நீர் நிலைகளில் மின்கம்பங்கள் மற்றும் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கப்படுவதால் ஆபத்து ஏற்படும் என தெரிவித்து அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய கோரியும், துணை போகும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், கயத்தாறு தாலுகா வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயி சரவணன் என்பவர் அங்குள்ள 200 அடி உயரமுள்ள மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தகவல் அறிந்து கயத்தாறு தாசில்தார் சுந்தர ராகவன், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன், டி.எஸ்.பி. ஜெகநாதன் மற்றும் போலீசார் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி சரவணனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நீர்நிலைப் பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க தடையின்மை சான்று வழங்கிய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான் கீழே இறங்கி வருவேன் என விவசாயி சரவணன் தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக மூன்று மணி நேரத்துக்கு மேலாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)