farmers rs 3 lakhs chennai high court

கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும், பால் பண்ணை அமைக்கவும் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அதை முதல்வர் நிவாரண நிதிக்குச் செலுத்த உத்தரவிட்டது.

Advertisment

Advertisment

கரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் விவசாயிகள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நான்கில் ஒரு பங்கு விவசாயிகள், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கக்கூட நிதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் பால் பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, எந்த ஒரு ஆய்வும் செய்யாமல், கோரிக்கையை நியாயப்படுத்தும் வகையில், எந்த ஆதாரங்களும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அத்தொகையை முதல்வர் நிவாரண நிதிக்குச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.