Advertisment

அழுகும் தக்காளிக்கு விலை கூறும் முதல்வர் பழனிசாமி அவர்களே, எங்களுக்குப் பதில் சொல்லுங்க..! -விவசாயிகள் கேள்வி!

 Farmers question to tn cm

Advertisment

மத்திய பா.ஜ.க.மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளான் சட்டங்களை எதிர்த்து நாடு முழுக்க எதிர்க்கட்சிகள்,விவசாயிகள் அமைப்புகள் கொந்தளித்துப் போராட்டங்களில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், மதுரை சுற்றுப் பயணத்தின் போது, இம்மசோதாவை ஆதரித்துமுதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம், பா.ஜ.க.வினரே பட்டியலிடத்தைப் பட்டியலிட்டு இந்த மசோதா விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்றார். அதற்கு அவர் கூறிய எடுத்துக்காட்டு கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுடன் ஒப்பந்தம் போடுவது போல என்று கூறி,அதில் தக்காளியையும் உதராணம் காட்டினார். இதற்கு எதிர் விளைவாக விவசாயிகளிடமிருந்து கோபக் குரல் எதிரொளிக்கிறது.

 Farmers question to tn cm

"கரும்பு ஆலைகளுடன் ஒப்பந்தம் போட்டு கரும்பு பயிர் செய்த விவசாயிகளுக்கு இதுவரை சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 1,800 கோடியை வாங்கித் தர வக்கற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒப்பந்த முறை விவசாயம் பற்றி ஓதுவது, பேசுவது கேலிக் கூத்தானது..." எனக் கடுமையாகக் கொதிக்கிறார்கள் ஈரோடு மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள்.

Advertisment

 Farmers question to tn cm

தற்சார்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கி.வே. பொன்னையன் மற்றும் கீழ்பவானி விவசாயிகள் சங்க தலைவர் செ. நல்லசாமி, தமிழக விவசாயிகள் சங்கம் (கே.சி.) ஈரோடு மாவட்டச் செயலாளர் சுப்பு ஆகியோர் நம்மிடம் பேசுகையில்,

"தமிழகத்திலுள்ள 40 க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகளோடு ஒப்பந்த முறையில்தான் கரும்பு விவசாயிகள் பயிர் செய்து, அரசு தீர்மானித்த விலைக்கு ஆலைகளுக்கு கொடுக்கின்றோம்.கரும்பு அறுவடை முடிந்த 15 நாளில் விவசாயிகளுக்கு கொள்முதலுக்கான பணத்தை ஆலைகள் கொடுக்க வேண்டும். தவறினால் 15 சதவீதம் வட்டி போட்டுக் கொடுக்க வேண்டும். இதுதான் ஒப்பந்த முறை. ஆனால் கரும்பு பணத்தை விவசாயிகளுக்கு தராமல் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 1,800 கோடி நிலுவை வைத்துள்ளனர் சர்கரை ஆலை நிர்வாகங்கள்.

இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு சர்கரை ஆலைகள் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூபாய் 15,000 கோடியாகும்.இதில் உத்திரபிரதேசத்தில் மட்டுமே நிலுவை தொகை ரூபாய் 12,000கோடி. இது 1966 ஆம் ஆண்டு சர்க்கரைக் கட்டுப்பாட்டுச் சட்டப்படி தான், இந்த ஒப்பந்தம் உள்ளது. அப்படித்தான் விவசாயத்தில் ஈடுபட்டோம். அந்தச் சட்டப்படி வருவாய் மீட்பு சட்டத்தைப் பயன்படுத்தி (Revenue Recovery Act) ஒவ்வொரு மாவட்ட அரசு நிர்வாகமும் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பணம் தரவில்லை என்றால் சர்க்கரை ஆலைகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்யலாம் என உள்ளது.

ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட நிர்வாகத்திடம் அதாவது கலெக்டரிடம் முறையிட்டோம்.பல வடிவங்களில் போராடி விவசாயிகள் துயரை அரசுக்கு எடுத்துச் சொன்னோம். மாவட்ட அமைச்சர்களை நேரில் சந்தித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஒப்பந்தப்படி எந்த சர்கரை ஆலை மீதும் நடவடிக்கை இல்லை. ஆம் இன்னும் பணம் வந்து சேரவில்லை. இப்படி ஒரு பயிருக்கே ஒப்பந்தப்படி பணம் பெற்றுத்தராத இந்த அரசு, எல்லா விளை பொருளுக்கும் கம்பெனிகளிடம் பணம் வாங்கிக் கொடுப்பது சாத்தியமே இல்லாத ஒன்றாகும்.

இப்பொழுது அரசே முறையாக நெல் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளுக்கு பெருத்த நட்டம் ஏற்பட்டு வருகிறது. இப்படியிருக்க தமிழக முதல்வர் அவரது வாய் இனிக்க, இனிக்க பேசுகிறார். "கம்பெனிகள் தக்காளி கிலோ ரூபாய் 40 க்கு ஒப்பந்தம் செய்து விளைச்சலின்போது சந்தைவிலை ரூபாய் 30 என்று இருந்தாலும் ஒப்பந்தப்படி கிலோ ரூபாய் 40 க்கே கொள்முதல் செய்வார்களாம்." அடேங்கப்பா அந்த கம்பெனி ரூபாய் 10 நட்டமடையுமாம்... என்ன வேடிக்கை?

 Farmers question to tn cm

நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்று வாய் கூசாமல் எடப்பாடி பழனிசாமி இப்படி கூறுவது விவசாயிகனின் தலையில் கல்லைப் போடுவதற்குச் சமம். ஒட்டு மொத்த விவசாயிகளும் முதல்வரிடம் கேட்பது மிக இலாபம் ஈட்டும் நிலையிலேயே சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு ஒப்பந்தப்படி பணம்கொடுக்காமல் உள்ளனர்.

தற்போது உள்ள சட்டப்படியே நடவடிக்கை எடுக்காத இந்த அரசுகள் அழுகும் தக்காளிக்கு கம்பெனிகளிடம் பணம் வாங்கித்தரும் என்பது மோசடியான பிரச்சாரமாகும். விவசாயிகள் அமைப்பாக இல்லை. ஒப்பந்தம் செய்யும் பெரு நிறுவனங்கள் பெரிய கட்டமைப்பை வைத்துள்ளது. இன்றைய சந்தை முறையிலேயே பலன் பெற முடியாத விவசாயிகள் கார்பரேட் சந்தையில் பயன் பெறுவது நடக்காத ஒன்றாகும். அதற்காக தான் திரும்ப கூறுகிறோம் தமிழக முதல்வர் திரும்ப, திரும்ப விவசாயி எனக் கூறிக்கொண்டு வேளாண்துறையை கார்பரேட்களுக்கு காவு கொடுப்பது வரலாற்றில் பெரும் துரோகமாகவே மாறும். விவசாயிகள் சங்கம் யாரும் முதல்வர் சொல்வது போல கோரிக்கை எதையும் வைக்கவேயில்லை. அப்படியிருக்க இது விவசாயிகள் மீது திணிக்கப்படுகிறது.

Ad

மூன்று வேளாண் பகை சட்டங்களும் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் அழித்து விடும். எனவே இது ஒரு மாபெரும் சமூகப் பிரச்சனையாக உருவெடுக்கும்..." என்றனர்.

கரும்பு என்ற ஒரு விவசாயப் பயிருக்கே ஒப்பந்தம் போட்ட விவசாயிக்கு கரும்பு ஆலைகள் முழுமையான பணம் தராமல் ஏமாற்றி வரும் நிலையில் அதுவும் நமது ஊர் கரும்பு ஆலை முதலாளிகள் நடத்திவரும் இந்த ஆலைகளிலேயே இப்படியிருக்க, நூற்றுக்கணக்கான விவசாயப் பொருட்களுக்கு கம்பெனிகள் விலை கொடுக்கும் என ஒப்பந்தம் முறைக்கு தமிழக அ.தி.மு.கஅரசு வக்காலத்து வாங்குவது ஒட்டுமொத்த விவசாயிகளையும் மத்திய பாஜக அரசு அடகு வைப்பதை ஆதரிப்பதுதான் என்பதைத் தவிர வேறென்ன?

bill edappadi pazhaniswamy Farmers
இதையும் படியுங்கள்
Subscribe