விவசாயிகளுக்கு உரிய காப்பீடு வழங்காததை கண்டித்து வரும் 10 ஆம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

Advertisment

farmers protest

தமிழக காவிரி விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட அளவிலான அவசர கூட்டம் திருவாரூரில் மாவட்ட தலைவர் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று விவசாயிகள் பிரச்சினைக் குறித்து பேசினார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. ’’காவிரி டெல்டாவில் கஜா புயல் தாக்குதலால் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டது. தென்னையை இழந்த விவசாயிகளுக்கு மட்டும் தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்கியது. நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனம் மூலம் முழு இழப்பீடு பெற்று தரப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி தற்போது காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கி வருகிறது.

Advertisment

அப்படி வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 573 வருவாய் கிராமங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மட்டும் இழப்பீடு மறுக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கதக்கது.

விடுபட்டுள்ள அனைத்து கிராமங்களுக்கும் உடனடியாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டாவை சேர்ந்த பல்லாயிரக் கணக்கான விவசாயிகளோடு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வரும் அக்டோபர் 10ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.