விளை நிலங்களில் அரிசி ஆலை அமைப்பதைத் தடுக்க வேண்டும் - விவசாயிகள் மனு

Farmers petition Stop setting up of rice mills on expensive land

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கொடுமுடி வட்டம் சிவகிரி கிராமம், வள்ளிபுரம்கருக்கம்பாளையம் காலனி, பொரசமேட்டு புதூர், புது அண்ணா காலனி, நாவன்காடுவிநாயகபுதூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் சிவகிரி கிராமத்தில் பொரசேமேடு ஊர் அமைந்துள்ளது. இங்கு கருக்கம்பாளையம் கருக்கம்பாளையம் காலனி, பொரசமேட்டு புதூர், புது அண்ணா காலனி, நாவன் காடு விநாயகபுதூர் ஆகிய கிராம மக்களின் வாழ்வாதாரம் விவசாயமாகும். மஞ்சள், நெல், கரும்பு, வாழை மற்றும் தென்னை போன்ற பயிர்கள் நாங்கள் அதிக அளவில் பயிர் செய்து வருகிறோம். வளம் மிக்க செழுமையான புஞ்சை விவசாய நிலத்தினை கொண்டது எங்கள் கிராமம். கருக்கம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குடிநீர் தேவைக்காக ஆழ்குழாய் கிணறு மேற்படி இடத்தினை ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் எங்கள் விவசாய நிலத்தினை மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த சிலர் விவசாயம் செய்வதாகக் கூறி நிலத்தின் உரிமையாளர்களிடம் கிரையம் பெற்றனர்.

இயற்கை விவசாயம் செய்வதாகக் கூறி நிலத்தைப் பெற்று அந்த இடத்தில் நவீன அரிசி ஆலை மற்றும் இதர தொழிற்சாலைகள் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக இந்த நிலங்கள் தரிசு நிலம் என்று வகைப்படுத்தி தவறான தகவலைக் கொடுத்தும் பொய்யான ஆவணங்களை உருவாக்கி சட்டத்திற்குப் புறம்பாக மின் இணைப்பைஅரசுகளிடம் இருந்து என்ஓசி போன்ற இதர உரிமைகளைப் பெற முயற்சி செய்கிறார்கள். இந்த செயல் எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இதனைக் கண்டித்து கடந்த 14 ஆம் தேதி சிவகிரி மின் அலுவலகத்துக்கு முன்பு 200க்கும்மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினோம்.

இங்கே தொழிற்சாலை தொடங்கப்பட்டுவிட்டால் எங்கள் ஊரின் தண்ணீர் வளம் குன்றி நிலத்தடி நீர் வற்றி நிலமும் கெட்டுப் போய்விடும். விவசாய நிலங்களும் பாழ்படும். பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். காற்று மாசுபாடு போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து கிராமங்களில் கூட்டம் நடத்தி கோரிக்கைகளை கேட்டு அறிந்து உரிய நீதி கிடைக்க வழிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

Erode
இதையும் படியுங்கள்
Subscribe