Advertisment

திமுக அணி நிர்வாகி மீது விவசாயிகள் அமைப்பு குற்றச்சாட்டு

Farmers organization accuses DMK team leader

Advertisment

"சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி மீது தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய அமைப்பு நிர்வாகிகள் கூறியுள்ளார்கள். இது சம்பந்தமாக கீழ்பவானி வாய்க்கால் ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த தலைவர் பெரியசாமி, செயலாளர் பொன்னையன், சுப்பு ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.அது பற்றி நம்மிடம் விளக்கி கூறினார் பொன்னையன்.

அவர்கள் கூறியதாவது, "கார்த்திகேய சிவசேனாபதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளராகவும், தமிழக அரசின் புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவராகவும் இருக்கின்றார். சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிற தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் சட்டக்கடமையும் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏதோ தவறாக நீதிமன்றம் கொடுத்துவிட்டதைப் போல கார்த்திகேய சிவசேனாபதி சித்தரித்து வருகின்றார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பாக மக்களை திசை திருப்பும் நடவடிக்கை ஆகும்.

இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை அறிக்கையிலேயே கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என நீர்வளத்துறையின் சார்பில் சட்டமன்றத்தில் கொள்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. எனவே அரசின் கொள்கை முடிவென்பது சட்டமன்றத்தில் மிகத்தெளிவாக முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது சட்டமன்ற ஆவணங்களில் பதிவாகி இருக்கிறது. உண்மைகள் இவ்வாறு இருக்க ஏதோ தமிழ்நாடு அரசிற்கு இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் விருப்பமே இல்லை என்பதை போல கார்த்திகேய சிவசேனாதிபதி பொய் சித்திரத்தை உருவாக்க பார்க்கிறார்.

Advertisment

அதேபோல் உயர்நீதிமன்றத்தில் மார்ச் 28ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கை என்பது மாநில அரசின் சார்பில் நீர்வளத்துறை தாக்கல் செய்த அறிக்கை ஆகும். நீர்வளத்துறையின் அறிக்கையை அரசின் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்து பேசுகிறார். இதை கார்த்திகை சிவசேனாபதி நீர்வளத்துறை அறிக்கைக்கு முரண்பட்டு அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் திட்டத்தை கைவிடுவதாகப் பேசியதாக வெளியில் பொய் பிரச்சாரம் செய்கிறார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் தெரிந்த அனைவருக்கும் தெரியும் எல்லா துறைகளுடைய நீதிமன்ற பதிலுரைகளும் அரசு தலைமை வழக்கறிஞர் மூலமாகத்தான் தாக்கல் செய்யப்படும். அரசு தலைமை வழக்கறிஞரின் வழிகாட்டுதலின் பேரில் தான் நீர்வளத்துறை நிலை அறிக்கையை (Status Report) தயாரித்து அனுப்புகிறது. எனவே அரசு வழக்கறிஞருக்கு என்று தனிப்பட்ட விருப்பமோ; கருத்தோ இருக்க முடியாது. அதுபோலத்தான் திறந்த நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள்முன்னிலையில் நடைபெற்ற ஒரு நிகழ்வையே இட்டுக்கட்டி மக்களை திசை திருப்புகிற பொய் பிரச்சாரத்தை இவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பத்தாயிரம் மரங்களை வெட்டி சீரமைப்பு வேலைகளை செய்வதற்கு ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பசுமைக் குழு கூடி முடிவு செய்து அந்த முடிவின்படி ஈரோடு, திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மிகத்தெளிவான ஆணையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இவ்வாறு வழங்கப்பட்டுள்ள ஆட்சித் தலைவரின் முறையான ஆணையை திசை திருப்பி 15 ஆயிரம் மரங்கள் என்று கூறிவிட்டு 4 லட்சம் மரங்களை வெட்டுகிறார்கள் என்று மிகப்பெரிய பொய் செய்தியை மக்களிடம் பரப்பி வருகிறார். ஆட்சித்தலைவர்களின் ஆணையை கொச்சைப்படுத்தி மக்களைத் தூண்டிவிடும் சீர்குலைவு மற்றும் சதி வேலைகளை அரசு பொறுப்பில் இருக்கும் கார்த்திகேய சிவசேனாபதி செய்து வருகிறார்.

இந்தகீழ்பவானி சீரமைப்பு வேலைகளை சுமுகமாக நிறைவேற்றுவதற்கு இரண்டு ஆண்டுக்காலம் இடைவிடாது முயற்சிகள் செய்து வருகிறார் அமைச்சர் சு.முத்துசாமி. அமைச்சர் சு.முத்துசாமி அவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் முதல்வரின் ஒப்புதலோடு இந்த வேலையை நிறைவேற்றுவதற்கு பொறுப்பு கொடுத்து கண்காணித்து வருகிறார். உயர்நீதிமன்றம் மிகத்தெளிவாக மாவட்ட ஆட்சியர்களுக்கும், நீர்வளத்துறை செயலாளருக்கும், காவல்துறையின் கோவை மண்டலத் தலைவருக்கும், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் இந்த வேலையை நிறைவேற்றுவதற்கு ஆணையிட்டு இருக்கிறது.

உயர்நீதிமன்றம் என்பது சட்டத்தின் ஆட்சியை ஒழுங்கு செய்கிற ஒரு உயர்ந்த அமைப்பாகும். அவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு பிறகும் பொய்யான செய்திகளை மக்கள் நடுவில் பரப்பி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்க முயற்சி செய்ய திமுக சுற்றுச்சூழல் அணியின் பெயரை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்தி மக்களை தூண்டிவிட்டு வருகிறார். உயர்நீதிமன்றத்தீர்ப்பை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் கார்த்திகேய சிவசேனாபதி மீது தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்." எனக் கூறியுள்ளார்கள்.

Farmers Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe