Skip to main content

இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் உழைக்கும் விவசாயிகள் இயக்கம்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Farmers Movement supporting India Alliance

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திமுக, அதிமுக, பாஜக, நாம்தமிழர் என்று நான்கு  கட்சிகளும் நான்குமுனை போட்டியாக தங்களது கூட்டணி கட்சிகளோடு தீவிரமாக வாக்குசேகரித்து வருகின்றனர். பல்வேறு சிறு இயக்கங்களும் இந்த கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் உழைக்கும் விவசாயிகள் இயக்கம் தங்களது ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளித்திருக்கிறார்கள்.

உழைக்கும் விவசாயிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களில் உள்ள, சிறு, குறு, குத்தகை விவசாயிகள்  மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் அனைத்து  உரிமை மற்றும் மேம்பாட்டுக்காக, உழைக்கும் விவசாயிகள் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக, ‘மார்க்சிய வழிகாட்டுதலை உள்ளடக்கிய   அம்பேத்கரிய சித்தாந்த’ அடிப்படையில் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது”.

இம்மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள,  18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் இந்த இயக்கத்தின் நிலைப்பாட்டை வரையறுக்கும் பொருட்டு, திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் கடந்த 25 – ஆம் தேதி இயக்க மாநிலத் தலைவர் சுந்தர் தலைமையில் இயக்க உயர் மட்டக்குழு கூடி, நாடு சந்திக்கும் வரலாறு காணாத இன்றைய பெரும் சவால்கள் அதன் விளைவாக குறிப்பாக உழைக்கும் விவசாயிகளின் ஒட்டுமொத்த  வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு  விவாதித்து கீழ்க்காணும் முடிவுகளை எடுத்தது

இந்திய ‘அரசியல் சாசனச் சட்டத்தின்’ அடிப்படை அம்சங்களான – “சனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம், பன்முகத்தன்மை, சமூக நீதி, சமூக மற்றும் பொருளாதார சமத்துவம், பேச்சுரிமை, எழுத்துரிமை, பெண் சமத்துவம், மாறுபடும் கருத்துக்களை முன்வைக்கும் உரிமை, அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க அனைத்து தரப்பினருக்கும் உள்ள அரசியல் உரிமை ஆகிய அனைத்திற்கும் முற்றிலும் எதிராக, ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சிவில் சட்டம், கார்பரேட்டுகளுக்கு மொத்த இந்தியாவையும் திறந்துவிடுதல், மத அடிப்படையில் பெரும்பான்மைவாதம் பேசி நாட்டைப் பிளவு படுத்தி, வெறுப்பு அரசியலை வளர்த்து, மாநில அரசுகளின் உரிமை மற்றும் கூட்டாட்சித்தத்துவத்தை மறுத்து, நாட்டின் முதுகெலும்புகளான உழைக்கும் விவசாயிகளின் உரிமை மற்றும் நலனை மொத்தமாக புறந்தள்ளி,’ இந்த பழம் பெரும் நாட்டின் அனைத்து சிறப்புகளையும் சிதைக்கும்” பாசிச ஆர் எஸ் எஸ்-இன் அரசியல் சக்தியான  பிஜேபி  மற்றும்  அதன் கூட்டணியில் உள்ள எந்த கட்சிக்கும், வேட்பாளருக்கும், நமது வாக்கு மற்றும் ஆதரவு இல்லை. 

மேற்காணும் அனைத்து  நாசகரப்போக்கையும் எதிர்த்து, இந்திய அரசியல் சாசனச்சட்ட விழுமியங்களை மதித்து, இந்தியாவின் சனநாயகக்  கொள்கை கோட்பாடுகள், மற்றும் உழைக்கும் விவசாயிகளை உள்ளடக்கிய உழைக்கும்  வர்க்கத்தின் நலன்   காக்கப்பட ஒன்று திரண்டுள்ள இந்தியா  கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இடைத்தேர்தல் முடிவுகள்; இந்தியா கூட்டணி அபார வெற்றி!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
by election results India alliance is a huge success

தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன. இந்நிலையில் 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டெஹ்ரா மற்றும் நலகர் ஆகிய இரு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய இரு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியிலும், பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மேற்கு தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரணகாட் தக்ஷின், பாக்தா மற்றும் மாணிக்தலா ஆகிய நான்கு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த இடைத்தேர்தல் முடிவின் படி காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலா 4 தொகுதிகளையும், ஆம் ஆத்மி, திமுக சார்பில் தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பீகாரில் உள்ள ரூபவுலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றுள்ளார். இமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூர் உள்பட இரு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. 

Next Story

7 மாநில இடைத்தேர்தலிலும் பாஜக கூட்டணிக்கு பின்னடைவு!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
7 state by-election setback for the BJP alliance

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்தை தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது.

இந்தத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் ஜூலை 10 ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. சரியாகக் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் 31,151 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  பாமக வேட்பாளர் அன்புமணி 11,483 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 2,275 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியையும் சேர்த்து இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 13 தொகுதிகளில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. அதேபோன்று இமாசல பிரதேசத்தில் 3 தொகுதிகளிலும், உத்தராகண்டில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பஞ்சாப்பில் 1 தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையில் வகிக்கிறது. ஆனால், 7 மாநில இடைத்தேர்தலிலும் பாஜக கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.