
ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொள்வார்கள். கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக விவசாயிகள் முன்வைக்கும் கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் அதிகாரிகள் பதில் கூறுவார்கள். மேலும் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் மாவட்ட தலைநகருக்கு வந்து செல்வதால் கால விரயமும் நேர விரயமும் பொருளாதார விரயமும் ஏற்படும். இவற்றைத் தவிர்க்கும் பொருட்டும் விவசாயிகள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்வு காண ஏதுவாகவும் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது திங்கள் கிழமைகளில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இரண்டாவது திங்கள் கிழமை கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடைபெறும் எனவும், மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமான விவசாயிகள் குறை கேட்புக் கூட்டமும் நடைபெறும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.
அதையடுத்து மார்ச் மாதத்தின் முதல் திங்கள் கிழமையான கடந்த வார திங்கட்கிழமையன்று மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு அவரவர் பகுதி விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கி கூறினர். இந்நிலையில் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையான இன்று கடலூர் மாவட்டத்தில் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் விருத்தாசலம், சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகங்களிலும் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் கோட்டாட்சியர் லூர்துசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலரும் வருகை தந்தனர். விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் சார்-ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலேயே இருக்கைகள் போடப்பட்டு அதில் விவசாயிகள் ஒரு பக்கமும் அதிகாரிகள் இன்னொரு பக்கமும் அமர வைக்கப்பட்டனர். விவசாயிகள் அதிகாரிகளை நேருக்கு நேர் பார்த்து பேச முடியாதபடி உட்புறமாக உட்கார்ந்து இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், " சார் ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்லக்கூடிய வாசற்படியில் அமர வைத்து எதற்காக கூட்டம் நடத்துகிறீர்கள்?" என அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்தும், போதிய இட வசதி இல்லாமல் விவசாயிகளை அவமதிக்கின்ற வகையில் செயல்படும் அதிகாரிகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய படி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குறைகளைக் கூறுவதற்காகக் கூட்டத்திற்கு வந்தால், அவர்களை இழிவுபடுத்தும் விதமாகச் செயல்படும் மாவட்ட நிர்வாகத்தின் அராஜக போக்கை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். விவசாயிகள் திடீரென்று கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதேசமயம் விவசாயிகளின் போராட்டத்திற்குப் பிறகு சார் ஆட்சியர் அலுவலக மாடியில் உள்ள கூட்ட அரங்கை சுத்தப்படுத்தி அங்கு சிறிது நேரத்திற்குப் பிறகு கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் விவசாயிகள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை. அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர்.