மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகளும் செல்கின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று திருச்சியிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர். முன்னதாக திருச்சி ரெயில்வே ஜங்ஷனுக்கு வந்த அச்சங்கத்தினர், கோரிக்கைகளைவலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, ‘திருச்சி மாவட்டம் சார்பாக நாங்கள் புறப்பட்டு செல்வதை போல, தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகள் புறப்பட்டு டெல்லி சென்று கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்’ என்று தெரிவித்துள்ளனர்.