
அரியலூர் மாவட்டம் திருமானூர் டெல்டா பகுதியான மஞ்சமேடு பஞ்சாயத்தைச் சேர்ந்த முடிகொண்டான் கிராமத்தில் உள்ள வடிகால் வாய்க்காலில் அதிகப்படியான நீர் வருவதால் போதுமான அளவு நீர் வடிய வசதியில்லாமல் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள முடிகொண்டான் செல்லும் பாலம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்தப் பாலத்தை போர்க்கால அடிப்படையில் அகற்றிவிட்டு புதிய உயர்மட்ட பாலமாக உயர்த்தி மேம்பாலமாக கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார வேண்டும் என விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த ஆண்டும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டத்தை செய்தனர். அப்போது அதிகாரிகள் பாலம் கட்டித்தருவதாக உறுதியளித்தும் நடவடிக்கை இல்லாததால், வெள்ள நீர் மீண்டும் மீண்டும் விவசாய நிலங்களைப் பாதித்து, குடியிருப்புப் பகுதிகளையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் முடிகொண்டான் எஸ்.ஆர்.எம். திருமண மண்டபம் அருகே திருமானூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தையும், கல்லுப்பட்டறை அருகே உள்ள கரைவெட்டி ஏரியிலிருந்து வரும் வடிகால் ஓடைகளையும், முடிகொண்டான் கிராமத்திலிருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 250 மீட்டர் தொலைவில் உள்ள சிமெண்ட்டைப் பயன்படுத்தி தயாரித்த கூடு பதித்துள்ள வடிகால்களை உயர்த்தி கான்கிரீட்டாலான உயர்மட்ட பாலமாக கட்டித்தர வேண்டும். மேலும், மூன்று வடிகால்களையும் சத்திரத்து ஏரியிலிருந்து கீழ்ப்புறமாக கொள்ளிடம் ஆறுவரை வடிகால்களை முறையாக அளவீடு செய்து சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க. சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். முடிகொண்டான் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கணேசன், கண்ணதாசன், கோவிந்தராசு, பன்னீர்செல்வம், இளவரசன், ராஜேந்திரன், தங்கராசு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசமிட்டனர். பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமானூர் காவல்துறை ஆய்வாளர் (பொறுப்பு) சகாயம் அன்பரசு மற்றும் மஞ்சமேடு ஊராட்சி கிராம நிர்வாக அதிகாரி மகேசுவரன் ஆகியோர் மூலம் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியருக்கு மனுவாக வழங்கினர்.