
சிதம்பரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட டெல்டா பாசனப் பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலம் காவிரி ஆறு பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கீழணைக்கு வந்து, அது வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்து திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீராணம் ஏரி நிரம்பியது. ஏரியின் முழு கொள்ளளவான 47.5 அடி உயரத்தை எட்டியதும், விவசாயிகளுக்குச் சம்பா நெல் நடவு பணிக்காகத் தண்ணீர் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனையொட்டி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் கடந்த 29-ந் தேதி கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்குக் கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் பாசனத்திற்குத் தண்ணீரை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து பாசன வாய்க்காலில் தண்ணீர் வர ஆரம்பித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள வடமூர், தெம்மூர், குமராட்சி, நாஞ்சலூர் உள்ளிட்ட சிதம்பரம், புவனகிரி பகுதியில் உள்ள டெல்டா விவசாயிகள் நேரடி நெல் விதைப்புக்காக ட்ராக்டர் மூலம் உழவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சில இடங்களில் நெல் விதைப்பு பணியும் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் பல இடங்களில் நடவு செய்வதற்கான அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. பல்வேறு பகுதிகளில் மழை விட்டுவிட்டுப் பெய்வதால் சம்பா பணிக்குத் தேவையான சூழல் உள்ளதாக விவசாயிகள் மத்தியில் கூறப்படுகிறது.