
நிலத்தை உழவுசெய்து, பண்படுத்தி, நீர்பாய்ச்சி, செடிகளுக்கு உரமிட்டு, பூச்சித் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து, இரவு பகல் பாராமல் அதைப் பராமரித்து அறுவடை செய்யும்போது வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தங்கள் வீட்டு மாடுகளைவிட்டு மேயவைத்த விவசாயிகளின் நிலை கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள மன்னார்குடி.பு, மாம்பாக்கம், உளுந்து ஆண்டார்கோவில், பாண்டூர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட அப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகள், தங்கள் வயல்களில் ஆண்டுதோறும் இதுபோன்ற சீசனில் வெண்டை விவசாயம் செய்துவருகின்றனர்.
தற்போது வெண்டைக்காய் அறுவடை சமயம். ஆனால், வெண்டைக்காய் வாங்குவதற்கு வியாபாரிகள் முன்வரவில்லை. காரணம், இந்தக் கரோனா நோய் பரவல். கரோனா நோய் பரவல் காரணமாக காய்கறி சந்தைகள் முழு நேரமும் செயல்படவில்லை. காய்கறி மார்க்கெட்டுகளில் மதியம் 12 மணிவரை மட்டுமே விற்பனை என்ற நிலை. மினி டெம்போக்களில் காய்கறிகளை வாங்கிச் சென்று, கிராமம், நகரம் என தெருத்தெருவாக விற்பனை செய்துவந்த சிறு வியாபாரிகள், லாக்டவுன் காரணமாக அவர்களது வாகனங்கள் செல்வது தடுக்கப்படுவதால் அவர்களும் வாங்க வரவில்லை.

சாகுபடி செய்த வெண்டைக்காய்களை விவசாயிகளே காய்கறி மார்க்கெட்டுக்கு எடுத்துச்சென்று வியாபாரிகளிடம் கொடுத்தாலும், எங்களுக்கு வியாபாரம் இல்லை, உங்களிடம் இருந்து வாங்கி நாங்கள் யாரிடம் விற்பது என்று வாங்க மறுக்கிறார்கள். இதனால் மனம் நொந்துபோன விவசாயிகள், வேறு வழியில்லாமல் தாங்கள் பாடுபட்டு கண்விழித்து நீர்பாய்ச்சி விளையவைத்த வெண்டை செடி வயல்களில் தங்களது மாடுகளைவிட்டு மேய்க்கிறார்கள். விவசாயிகளின் நிலை காலம் காலமாக இதே அவலத்தில்தான் உள்ளது.
“பயிர் செய்துள்ள காய்கறிகளைக் கொள்முதல் செய்து, குளிரூட்டப்பட்ட குடோன்களில் பாதுகாப்பாக வைத்து. விளைச்சல் இல்லாத நேரங்களில் அவற்றை விற்பனை செய்வதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும்” என்கிறார்கள் விவசாயிகள். “‘உப்பு விக்க போனா மழை கொட்டுகிறது, மாவு விக்க போனா சூறாவளி காற்று வீசுகிறது,’ இந்த நிலையில்தான் விவசாயிகளான எங்களின் நிலை உள்ளது. தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் இப்படிப்பட்ட எங்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்” என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.