Skip to main content

குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உர மூட்டைகள் எடை குறைவாக விற்பதாக விவசாயிகள் புகார்!

Published on 05/05/2018 | Edited on 05/05/2018

 

ipl

 

குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்று வட்டார விவசாயிகள் குறிஞ்சிப்பாடி வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும்    உரக்கடைகளில் விற்கப்படும் பொட்டாஷ் உரம் மற்றும் கலப்பு உரமூட்டைகள் குறைந்தபட்சம் 800 கிராம் முதல் இரண்டரை கிலோ வரை  எடை குறைவாக விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாற்றுகின்றனர். கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திலும் புகார் கூறினர்.  

 

ஆனால் ஒருவாரம் ஆகியும் நடவடிக்கை எடுக்காத  காரணத்தால் நேற்று மாலை  குறிஞ்சிப்பாடி கூட்டுறவு  சங்கத்திற்கு சென்ற விவசாயிகள்  ஒரு மூட்டை பொட்டாஷ் உரத்தை வாங்கி விற்பனையாளரிடம் எடைபோட சொல்லியுள்ளனர். அதற்கு  எடைபோடும் மெஷின் இல்லை என்று ஊழியர்கள் கூற,  செயளாலரிடம் கேட்டதற்கு அவரோ  எடை போட்டு கொடுக்கும் பழக்கம் கிடையாது என்று கூறியுள்ளார்.  

 

இதுகுறித்து மாவட்ட, இணைபதிவாளரிடம் புகார் கூற அவரோ, அருகிலுள்ள  பழைய பேப்பர் கடையில் மூட்டையை கொண்டு போய் எடைபோட சொல்ல, அவ்வாறே எடை போட  ஒன்ரறை கிலோ எடைகுறைவாக இருந்துள்ளது.  
அதேபோல் சில தனியார் கடைகளிலும் எடை குறைவாக விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் புகார் கூறுகின்றனர். 

தொடர்ந்து எழுந்த புகாரையடுத்து  இன்று குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உர  விற்பனை நிலையங்களில்,  வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) க.பாலசுப்ரமணியன், வேளாண்மை உதவி இயக்குநர் குறிஞ்சிப்பாடி  ப.சின்னக்கண்ணு மற்றும் வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) அமிர்தராஜ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சில கடைகளில் உரமூட்டைகளில் எடை குறைவாக காணப்பட்டது ஆய்வில் தெரிந்தது. அதற்கு விற்பனையாளர்கள் ரயிலில் வரும் உரமூட்டைகள் இறக்கும் போது,  இரும்பு ஹூக் கொண்டு பைகளை துளையிட்டு தொழிலாளி இறக்குவதாலும்,  அதேபோல் உரக்கடைகளுக்கு ஏற்றி இறக்கும் போதும்  இது போன்றே ஹூக் பயன்படுத்துவதாலும் சன்னமாக உள்ள பொட்டாஷ் உரம் சிந்துவதாக கூறினர். 

 

இனிவரும் காலங்களில் இது போன்று ஹூக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமெனவும், எடை குறைவான மூட்டைகளை உடனடியாக திரும்ப பெற்று மாற்றி தருமாறு உர நிறுவனங்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதேசமயம் இந்த ஆய்வு முழுமையாக, நேர்மையாக இல்லை  என விவசாய சங்கத்தினர் குற்றம் சாற்றுகின்றனர்.

சார்ந்த செய்திகள்