Farmers Association holds struggle at the sub Divisional Office

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா முடுக்கலான்குளம் கிராமத்தில் விவசாயிகளின் விளை நிலங்களை 300 ஏக்கருக்கு மேல் போலியாக பத்திரப்பதிவு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடியாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். விவசாய நிலங்களில் அத்துமீறி சோலார் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் மீது வழக்குகள் போடுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என ஏற்கனவ அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த மாநில பொருளாளர் கே பி பெருமாள், மாவட்டச் செயலாளர் புவிராஜ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தனர். போலீசார் அவர்களை வாசலில் தடுத்து நிறுத்தினர். வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து கோரிக்கையை தெரிவிக்க வேண்டும் என கூறியதை தொடர்ந்து நிர்வாகிகளை மட்டும் போலீசார் உள்ளே அனுமதித்தனர். கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தினர்.

Advertisment

Farmers Association holds struggle at the sub Divisional Office

ஒரு விசாரணை குழு அமைத்து அதன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார். அப்போது அதுவரை அங்கு நடைபெறும் தனியார் நிறுவன பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். அது தங்களால் முடியாது என அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தின் வெளியே விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் காரணமாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.