Skip to main content

பன்னீர் கரும்பு விளைச்சல் அமோகம்; அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Farmers are happy as govt has announced that it will purchase sugarcane at Rs.33

தமிழகத்தில் பெரிதும் போற்றப்படும் தமிழர்களின் விழாவாகப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனைத் தைத்திருநாள் என்று அழைக்கிறார்கள். இதில் இயற்கையை வணங்கும் விதமாக தை 1 ஆம் தேதியில் சூரிய வழிபாடும், விவசாயத்துக்கு உதவும் மாடுகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக மாட்டுப் பொங்கலும் விவசாயிகளின் திருவிழாவாக ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளாக வருகிற 15 ஆம் தேதி கொண்டாடும் பொங்கல் பண்டிகையில் பன்னீர் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, பொங்கல் பானை, அறுவடையில் கிடைத்த புது பச்சரிசி  உள்ளிட்டவை  முக்கிய இடம் பெறுகிறது

இத்தகைய திருநாளைக் கொண்டாடும் விதமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்ய பன்னீர் கரும்பு சிதம்பரம் பகுதியில் கடவாச்சேரி, பழைய நல்லூர், சாலியந்தோப்பு, பிள்ளைமுத்தாசாவடி, அகரநல்லூர், வேளக்குடி, சேத்தியாதோப்பு, வாழக்கொல்லை, வீராணம் ஏரியின் படுகை, நடுவீரப்பட்டு, பாலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பல ஆயிரம் ஏக்கரில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்து விவசாயிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக அரசே பொங்கலுக்கு பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் கரும்பு கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசுடன் பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறது. இது விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, முழு பன்னீர் கரும்பு, ரூ. 1000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் 5 அடி உயரமுள்ள முழு கரும்பை ரூ.33க்கு அரசே கொள்முதல் செய்யும் என அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பழைய நல்லூர் பகுதியில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயி கூறுகையில், போதிய மழை பெய்ததாலும் இயற்கை இடர்பாடுகள் எதுவும் இல்லாததாலும் கரும்பு நன்றாக விளைந்துள்ளது. ஒரு கரும்பு 6 அடி முதல் 7 அடி வரை வளர்ந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது. அரசு நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

சார்ந்த செய்திகள்