Farmers agony Ration shops provide things instead of rice

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சுற்றுப்பகுதியிலுள்ள ஒடுகத்தூர், மேல் அரசம்பட்டு, கொட்டாவூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் அளவில் நெற்பயிர்கள் பயிரிடப்படுவதற்கு 6 மாதமாக விவசாயிகள் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில், தற்போது அறுவடை செய்யும் நேரத்தில் திடீரென நான்கு நாளாக தொடர்ந்து மழை பெய்ததால் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்து, இது குறித்து விவசாயிகள் வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

அதற்கு அதிகாரிகள், முதியோர் உதவித்தொகை பெறும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முடியாது என கூறியதால் மன வேதனை அடைந்த விவசாயிகள் விளை நிலத்தில் இறங்கி ஒப்பாரி வைத்து கதறி அழுதும், கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் உரிய நிவாரணம் வழங்கவில்லை என்றால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கு பதிலாக விஷ மருந்துகளை வழங்கி விவசாயிகளைக் கொன்றுவிடுமாறு கூறி அழுது ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, ‘நாங்கள் கடனை வாங்கி விவசாயம் பயிர் செய்து வருகிறோம். தற்போது பயிர்கள் நீரில் மூழ்கி மேற்கதிர்கள் நாற்றுகளாகவே முளைத்து விட்டது. இதனால் ஒரு ஏக்கர்க்கு சுமார் ரூ. 30 ஆயிரம் வரை செலவாகி உள்ளது. இந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம். இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி எங்கள் குடும்பத்தை காக்க வேண்டும், இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம்’ என்று கூறியுள்ளனர்.