The farmer who lodged the complaint ..! Corruption Eradication DSP takes immediate action ..!

Advertisment

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ளது கடம்பூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கல்லூரி மாணவரான 22 வயது வசந்தகுமார். இவர், மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், வசந்தகுமாரின் தந்தை, அரசின் உழவர் அட்டை மூலம் அவரது மகன் இறப்புக்கு அரசு திட்டத்தின்படி உதவித்தொகையாக 22 ஆயிரம் ரூபாய் பெறவேண்டி கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து என்பவரை அணுகியுள்ளார்.

அவர், அரசு உதவித்தொகை பெற்றுத் தருவதற்கு பரிந்துரை செய்ய வேண்டுமானால், தமக்கு 4,000 ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று மாரிமுத்து வற்புறுத்தி கேட்டுள்ளார். வாழவேண்டிய மகனைப் பறிக் கொடுத்துவிட்டு, வறுமையில் வாடும் தங்களிடம் 4,000 ரூபாய் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியின் ஈவிரக்கமற்ற தன்மையை கண்டு மனம் வேதனைப்பட்டுள்ளார் விவசாயி முருகேசன்.

இதையடுத்து முருகேசனின் உறவினர் அருள்ஜோதி, அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்தை அனுகியுள்ளார். அவர்களது ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய 4,000 ரூபாய் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்துவின் சொந்த ஊரான சாத்தப்பாடிக்குச் சென்று அவரிடம் நேரில் அளித்துள்ளார் அருள் ஜோதி.

Advertisment

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சந்திரசேகர் தலைமையிலான போலீசார், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்துவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.