bank

டிராக்டர் ஜப்தி செய்யப்பட்டதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்துக் கொண்டதால் அவரது உறவினர்கள், விவசாய சங்கத்தினர் சிதம்பரம், கடலூரில் உள்ள வங்கிக் கிளை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை மாலையில் முற்றுகையிட்டனர்.

Advertisment

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் கருணாகரநல்லூரைச் சேர்ந்தவர் சு.தமிழரசன் (48). விவசாயியான இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் தன்னிடமுள்ள பழைய டிராக்டரை கோட்டக் மகேந்திரா வங்கியிடம் வழங்கி விட்டு அதே வங்கியிடமிருந்து ரூ.4.25 லட்சம் கடனில் புதிய டிராக்டருக்கான கடன் வாங்கியுள்ளார். இதில், ரூ.30 ஆயிரம் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு பாக்கித்தொகை செலுத்தவில்லையாம். சர்க்கரை ஆலையிடமிருந்து பணம் வந்ததும் கட்டி விடுவதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆனால், கடந்த புதன்கிழமையன்று திருவண்ணாமலையிலிருந்து வந்திருந்த வசூல் அலுவலர்கள் சிலர் டிராக்டரை ஜப்தி செய்து எடுத்துச் சென்றதோடு அவரையும், குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டிச் சென்றுள்ளனர். இதனால், மனமுடைந்த தமிழரசன் அன்றே விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இறந்தார். இதனையடுத்து, தமிழரசன் சாவுக்கு காரணமான வங்கி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவரது உறவினர்கள் விவசாய சங்கத்தினர் வெள்ளிக்கிழமை மாலையில் சிதம்பரம்,கடலூரில் உள்ள கோட்டக் மகேந்திரா நிறுவனத்தின் ஆயுள் காப்பீட்டு பிரிவை முற்றுகையிட்டனர். இதற்கிடையில் இப்பிரிவை முற்றுகையிடும் தகவல் கிடைத்ததும் அதன் ஊழியர்கள் அலுவலகத்தை மூடிவிட்டுச் சென்றனர்.

விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் மாதவன் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் இளங்கீரன், ஆகியோர் பங்கேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இதனையடுத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், கடன் வழங்கிய வங்கியின் கிளை அலுவலகம் இங்கே இல்லை. எனவே, இந்த முற்றுகையை கைவிட வேண்டுமென வலியுறுத்தினார்.

ஆனால், தமிழரசன் சாவுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், அவரது இறப்பிற்கு உரிய நிவாரணம் வழங்கினால் தான் மருத்துவமனையில் உள்ள அவரது சடலத்தை பெறுவோம். அதுவரையில் போராட்டம் தொடருமென விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.