Advertisment

நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் வெண்டைக்காய்களை இலவசமாக வழங்கிய விவசாயி!

The farmer who provided the ladys finger for free regardless of the loss

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது வ. சின்ன குப்பம் என்ற கிராமம். இந்தக் கிராமத்தைச் சுற்றிலும் உள்ள வண்டிப்பாளையம், பாதூர், சேர்ந்தமங்கலம், கெடிலம், மாரனோடை, திருநாவலூர் உட்பட பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் வெண்டைக்காய், கத்தரிக்காய், புடலங்காய், கொத்தவரங்காய் உள்ளிட்ட காய்கறிகளைப் பெருமளவில் விவசாயம் செய்வார்கள். அப்படி விவசாயத்தின் மூலம் விளையும் காய்கறிகளை அறுவடை செய்து சென்னை, கோயம்பேடு, கடலூர், விழுப்புரம், கேரளா, உள்ளிட்ட ஊர்களில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு லாரிகள் மூலம் அனுப்பிவருவார்கள். உழைப்புக்கு ஏற்ற அளவில் வருவாய் கிடைத்துவந்தது.

ஆனால் கடந்த 10 நாட்களாக வெண்டைக்காய்க்குப் போதிய விலை கிடைக்காததால் மார்க்கெட்டில் மிகக் குறைந்த விலைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் அறுவடை செய்துகொண்டு செல்லும் வாகன வாடகைக்கு கூட வருமானம் விலையை வைத்து வெண்டைக்காயை விற்பனை செய்வதில் நஷ்டம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் வ. சின்ன குப்பத்தைச் சேர்ந்தவிவசாயி அழகு இளங்கோவன், தன் நிலத்தில் பிரண்டைக் கீரை விவசாயம் செய்துள்ளார். அதன்மூலம் விளைந்த வெண்டைக்காய்களை அறுவடை செய்து விலைக்கு விற்பதற்கு அனுப்பிவைத்தார். வண்டி வாடகைக்குக் கூட வருமானம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தனது நிலத்தில் விளைந்த 7 டன் வெண்டைக்காய்களைத் தனது விவசாய டிராக்டர் மூலம் ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு கொண்டுவந்து நிறுத்தினார்.

அங்கே நின்றுகொண்டிருந்த விவசாயிகள், பொதுமக்கள், அந்த வழியே வாகனத்தில் செல்வோர் போன்றவர்களுக்கு இலவசமாக வெண்டைக்காய்களை வாரி வழங்கினார். விவசாயி இலவசமாக வழங்கிய வெண்டைக்காயைவாங்குவதற்கு அந்தப் பகுதியில் ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போதிய விலை கிடைக்காததால், விளைந்த வெண்டைக்காயை தெருவில் கொட்டி வீணாக்குவதைவிட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கினால் அவர்கள் சமைத்து சாப்பிடுவார்கள் என்ற நோக்கத்தில் இலவசமாக கொடுத்ததாக விவசாயி அழகு இளங்கோ கூறினார். “விவசாயிகள் அறுவடை செய்யும் காய்கறிகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். என்னைப் போன்று வெண்டைக்காய் பயிரிட்டு பாதிக்கப்பட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்” என்று அழகு இளங்கோ கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisment

விவசாயியின் நிலை பற்றி கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு, ‘விவசாயி மாவு விற்கச் சென்றால் காற்றடிக்கும், உப்பு விற்கச் சென்றால் மழை பெய்யும்’. இந்த நிலையில்தான் விவசாயிகளின் வாழ்க்கை நிலை உள்ளது. அரசு, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.

Farmer kallakurichi
இதையும் படியுங்கள்
Subscribe