Farmer passed away in perambalur police investigation

Advertisment

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மாக்காயி குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன்(50). இவரது மகள் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ரயில் மூலம் அரியலூர் வந்து இறங்கி உள்ளார். ரயில் நிலையத்திலிருந்து தங்கள் ஊருக்கு மகளை அழைத்துச் செல்வதற்காக ராமச்சந்திரன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

ராமலிங்கபுரம் என்ற ஊர் அருகில் அவர் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் ராமச்சந்திரனின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து இரும்பு போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ராமச்சந்திரன், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து ராமச்சந்திரன் மனைவி லலிதா குன்னம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணதாசனிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குன்னம் போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அவர்களது விசாரணையில் அருணகிரி மங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் மணிகண்டன்(35). மாக்காய் குளம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை மணிகண்டன் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அதை ராமச்சந்திரன் தட்டி கேட்டுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அவரது உறவினர்கள் நடராஜன், சிவசாமி உட்பட ஒன்பது பேர் சேர்ந்து திட்டம் தீட்டி ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வழிமறித்து படு கொலை செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisment

இதையடுத்து போலீசார் சிவசாமி, நடராஜன் ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மேலும் ஏழு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.