A farmer passed away in his own field! Police in serious investigation

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது தொட்டியம் கிராமம். இப்பகுதியிலுள்ள போயர் தெருவைச் சேர்ந்த ராகவன் என்பவரது மகன் விவசாயி சண்முகம் (50).திருமணமான இவருக்கு ராஜ்குமார், சுரேஷ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்தநிலையில்,சண்முகத்திற்கு தொட்டியம் அருகில் உள்ள மடத்துக்குளம் அருகில் விவசாய நிலம் உள்ளது. சண்முகம் குடும்பத்திற்கும், அதே பகுதியில் வசிக்கும் பெரியசாமி என்பவர் குடும்பத்திற்கும் நிலப் பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது. மேலும், சண்முகத்தின் மைத்துனர்கள் அன்பழகன், செந்தில்குமார் குடும்பத்துக்கும் பெரியசாமி மருமகன்கள் ரவிக்குமார், மணி ஆகியோருக்கும் கடந்த ஆறு வருடங்களாக நிலம் சம்பந்தமான பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

அந்த வகையில் கடந்த 31ஆம் தேதி சண்முகத்தின் உறவினர்கள் அன்பழகன் மற்றும் செந்தில்குமார் தரப்புக்கும் பெரியசாமி தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சண்முகம் சண்டை வேண்டாம் என்று தடுக்கச் சென்றபோது சண்முகம் தாக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (02.08.2021) மாலை 7 மணி அளவில் தனது நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச சென்ற சண்முகம், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரைப் பல்வேறு இடங்களில் தேடியும் ஆள் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவரது விவசாயநிலத்திற்குச் சென்று பார்த்தபோது, உடலில் ரத்தக் காயங்களுடன் அவரது நிலத்திற்கு அருகில் சடலமாக கிடந்துள்ளார் சண்முகம். இதுகுறித்து அவரது மகன்கள் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரையடுத்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்முகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், சந்தேக மரணம் என வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். முன்விரோதம் காரணமாக சண்முகம் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி, பிணமாக கிடந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment