/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2874.jpg)
சேலம் அருகே நிலத்தகராறில் விவசாயியை அடித்துக் கொன்ற கணவன், மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள நடுவனூரைச் சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயி. இவருடைய நிலத்திற்கு அருகே மாரப்பன் (65), இவருடைய மனைவி சரோஜா (62) ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள், கந்தசாமியின் நிலத்திற்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர்.
அரசு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக அவர்கள் இடையே தகராறு இருந்து வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மாரப்பனும், சரோஜாவும் சேர்ந்து கந்தசாமியை அடித்துக் கொன்றனர்.
இதுகுறித்து கெங்கவல்லி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதி ஜெகநாதன் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) தீர்ப்பு அளித்தார்.
விவசாயி கந்தசாமியை கொலை செய்த குற்றத்திற்காக மாரப்பன், சரோஜா ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, காவல்துறையினர் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)