ADVERTISEMENT

“பூமி திருத்தி உண்” –நிதியமைச்சர்! “ நிலைமை அப்படியில்ல, நெல் அறுக்க கூட முடியலை” – வேதனையில் விவசாயிகள்!

08:54 PM Feb 02, 2020 | kalaimohan

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். பருவமழை நல்ல முறையில் பொழிந்ததால் விளைச்சல் நன்றாக இருந்தது. ஆனால் அறுவடை செய்யக்கூடிய கார்த்திகை மாதத்தில் பின்மழை பெய்த காரணத்தினால் விளைநிலங்களில் ஈரப்பதம் ஏற்பட்டு விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


மழை, முன்பனி, பின்பனி என இயற்கை பருவ மாற்றங்களால் நெல் அறுவடை தாமதமாகி தற்போது அறுவடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் ‘வெந்த புண்ணில் வெல் பாய்ச்சுவதை போல’ விவசாயிகளின் வேதனையை அதிகரிக்கும் விதமாக நெல் அறுவடை செய்யும் இயந்திரங்களின் பற்றாக்குறையால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பருவநிலை மாற்றத்தால் நெல்மணிகள் புகை அடித்தும், தரையில் படுத்து விட்டதினால் மறுமுளைப்பும் ஏற்பட்டு வருகிறது என்றும் விவசாயிகள் வேதனையில் வெம்முகின்றனர்.


கடந்த 10 நாட்களுக்கு முன்பு கடலூர் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளரும், வேளாண் இணை இயக்குனரும் விவசாய சங்க பிரதிநிதிகள், அறுவடை இயந்திர உரிமையாளர்களை அழைத்து பேசி நெல் அறுவடைக்கு ஒரு மணி நேரத்திற்கு பெல்ட் இயந்திரங்கள் ரூபாய் 1800, டயர் இயந்திரங்கள் ரூ 1300 என கட்டணம் நிர்ணயித்தனர். ஆனால் டீசல் விலை, ஓட்டுனர் சம்பளம் ஆகியவற்றை காரணம் காட்டி பெல்ட் இயந்திரங்கள் ரூ 2800-ம், டயர் இயந்திரங்கள் 1500-ம் வாங்குகின்றனர். அப்படியும் உரிய காலத்தில் அறுவடை செய்ய இயந்திரங்கள் கிடைப்பதில்லை. இதனால் நெல் மணிகள் வயலிலேயே சிந்தும் அவல நிலை. வெளி மாவட்டங்களுக்கு சென்று இயந்திரங்கள் கொண்டு வந்து அறுவடை செய்தாலும் ஒரு நாளில் 3 ஏக்கர் மட்டுமே அறுவடை செய்ய முடிகிறது.

இப்படி அறுவடை செய்த நெல் அரசின் கொள்முதல் நிலையங்களில் ரூ.760-ம், வண்டி வாடகை கொடுத்து அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்றால் ரூ 1050 முதல் 1300 வரை தான் கொள்முதல் செய்யப்படுகிறது.


இதுகுறித்து சாத்துக்கூடல் விவசாயி சக்திவேல் கூறும்போது, சட்டீஸ்கர் மாநிலத்தில் 100 கிலோ குவிண்டால் நெல் ரூபாய் 2500-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதே நூறு கிலோ குவிண்டால் ரூபாய் 1905 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அங்கு 1 கிலோ நெல்லுக்கு அரசின் ஊக்கத்தொகை 25 பைசா வழங்கப்படுகிறது. இங்கு 19.05 பைசா வழங்கப்படுகிறது. நானும் விவசாயி என கூறுகிற நம்முடைய முதலமைச்சர் விவசாயிகளுக்கான விளைபொருட்களுக்கு கூடுதல் விலை உயர்த்தினால் தானே விவசாயிகள் வாழ்வாதாராம் உயரும். அதேபோல் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும் முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘பூமி திருத்தி உண்’ என்ற ஒளைவயாரின் ஆத்திசூடியை கூறி தாக்கல் செய்கிறார். ஆனால் விவசாயிகள் விவசாயம் செய்வதை விட்டுவிடலாமா… என யோசிக்கும் நிலைதான். விவசாயிகள் வளமான முறையில் விவசாயம் செய்யும் சூழலை அரசுகள் ஏற்படுத்தி தரவில்லை. விளைவித்த நெல்லை அறுவடை செய்ய வாய்ப்புகளில்லை. அவற்றிற்கு உரிய விலை கிடைப்பதில்லை. 15 லட்சம் கோடி கடன் தரப்படும் என்கிறார் நிதியமைச்சர். விவசாயிகளை மேலும் மேலும் கடனாளியாக்குவதற்கு பதில் உரிய வாய்ப்புகளை வழங்கினாலே விவசாயம் செழிக்கும், விவசாயி வாழ்வான் “ என்கிறார்.

எனவே அரசுகள் ஒவ்வொரு கிராமங்களிலும் விவசாயிகள் பயிரிடும் விளைச்சல் குறித்து தகவலை சேகரிக்க வேண்டும் என்றும், வேளாண் துறை மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து, தேவையான இயந்திரங்களை தங்கு தடையின்றி கொடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT