farmer incident police investigation gangavalli in salem district

Advertisment

கெங்கவல்லி அருகே, விவசாயியை கத்தியால் குத்தி கொலை செய்தது ஏன்? என்று கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் சீனிவாசன் (வயது 42). லாரி ஓட்டுநரான இவர், விவசாயமும் செய்து வந்தார். இவருடைய அத்தை பங்காரு (வயது 66).

இவர்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் பொதுச்சொத்தாக 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சீனிவாசன் மட்டும் ஏகபோகமாக விவசாயம் செய்து வந்துள்ளார். நிலத்தில் பங்கு கேட்டு பங்காருவின் பேரன்கள் மணிகண்டன் (வயது 31), விஜி (வயது 28) ஆகிய இருவரும் சீனிவாசனிடம் ஏற்கனவே அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

Advertisment

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சீனிவாசன் இருசக்கர வாகனத்தில் கடம்பூர் - பைத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த மணிகண்டன், விஜி ஆகிய இருவரும், கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தனர்.இச்சம்பவம் குறித்து ஆத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே கொலையாளிகள் இருவரும் ஆத்தூர் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தனர்.

இருவரையும் இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர்களை, கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர், அந்தக் கொலை எப்படி நடந்தது என்பதை நடித்துக் காண்பிக்கச் சொல்லி வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.காவல்துறையில் மணிகண்டன், விஜி ஆகிய இருவரும் அளித்துள்ள வாக்குமூலத்தில், சீனிவாசன் குடும்பத்திற்கும், எங்கள் பாட்டி பங்காரு குடும்பத்திற்கும் 5 ஏக்கர் நிலம் பொதுச்சொத்தாக உள்ளது. இந்த நிலத்தை சீனிவாசன் பங்கு பிரித்துக் கொடுக்காமல் அவரே அனுபவித்து வந்தார்.

எங்களுடைய அப்பா ரவிச்சந்திரன், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு அவரிடம் நிலத்தில் பங்கு கேட்டபோது, எங்கள் தந்தையை கடுமையாக தாக்கினார். தலையைப் பிடித்து சுவரில் மோதியதில் அவருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது. அதற்கு 3 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவானது. உங்களால்தானே எங்கள் தந்தைக்கு பார்வை பாதிக்கப்பட்டது. அதற்கான மருத்துவ செலவுக்காகவாவது பணத்தைக் கொடுக்கும்படி கேட்டோம். அதனால் அப்போது சீனிவாசன் 2 லட்சம் ரூபாய் கொடுத்தார். பின்னர், அந்தப் பணம்தான் எங்களுக்குத் தர வேண்டிய நிலத்திற்கான பாகத்திற்கானது என்று சொன்னார்.

Advertisment

இது எங்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மீண்டும் நிலத்தில் பங்கு கேட்டு வந்தால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டினார். எங்கள் தந்தையை தாக்கியதற்கு பழி தீர்க்கவும், அவரிடம் இருந்து எங்களை காப்பாற்றிக் கொள்ளவும் நாங்கள் முந்திக்கொண்டு சீனிவாசனை வெட்டிக் கொலை செய்தோம். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 2 கொடுவாள், சூரிக்கத்தி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களை மீண்டும் ஆத்தூர் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.நீதிமன்ற உத்தரவின்பேரில் கொலையாளிகள் இருவரும், ஆத்தூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.